எல்லை தாண்டி ஆப்கானிஸ்தானில் வான் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்: குழந்தைகள் உள்பட 8 பேர் பலி
|ஆப்கானிஸ்தான் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அந்நாட்டு அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காபூல்:
பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத குழுவினர் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருப்பதாகவும், அவர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான நாச வேலைகளில் ஈடுபடுவதாகவும் பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது. ஆனால் இதனை மறுத்த ஆப்கானிஸ்தான், பிற நாடுகளின் இயக்கத்தினரை உள்ளே விட மாட்டோம் என கூறி உள்ளது. இந்த விவகாரம் இப்போது பெரிய அளவில் வெடிக்கத் தொடங்கி உள்ளது.
பாகிஸ்தானில் வடக்கு வஜிரிஸ்தானின் பழங்குடியினர் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஆப்கானிஸ்தான் எல்லையோரம் இந்த பகுதி உள்ளது. இந்த தாக்குதலில் 7 வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு ஹபீஸ் குல் பஹதர் என்ற அமைப்பு பொறுப்பேற்றது. ஆனால் இந்த அமைப்பினர் எல்லையில் ஆப்கானிஸ்தான் பகுதிக்குள் இருந்து செயல்படுவதாக பாகிஸ்தான் பாதுகாப்பு படை தெரிவித்தது. தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் அதிபர் சர்தாரி சூளுரைத்திருந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம் இன்று அதிகாலையில் ஆப்கானிஸ்தான் பகுதிக்குள் வான் தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. பாக்திகா, கோஸ்ட் ஆகிய மாகாணங்களில் உள்ள குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 3 குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளது. ஆனால் பாகிஸ்தான் தரப்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் தனது பிரச்சினைகள் மற்றும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த தவறியதற்காக ஆப்கானிஸ்தானை குற்றம் சாட்டுவதை நிறுத்தவேண்டும் என அரசின் செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தினார்.