பாகிஸ்தான்: பைக்கை மறித்து கொள்ளை முயற்சி - மனைவி பலி; கணவன், மகன் காயம்
|கராச்சியில் நடப்பு ஆண்டில், கொள்ளை முயற்சி சம்பவத்தில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.
கராச்சி,
பாகிஸ்தானின் கராச்சி நகர் அருகே பல்தியா நகரில் கணவன், மனைவி ஆகியோர் தங்களுடைய மகனுடன் நேற்றிரவு மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, ஆயுதமேந்திய மர்ம நபர்கள் சிலர் அவர்களை வழிமறித்தனர். பின்னர், மனைவியிடம் இருந்த பர்சை பறிக்க முயன்றனர். இதனால், பைக் கட்டுப்பாடு இழந்து ஓடி, விபத்தில் சிக்கியது. இந்த சம்பவத்தில், அந்த பெண் உயிரிழந்து விட்டார். மற்ற 2 பேரும் காயமடைந்தனர்.
அவர்கள் மீட்கப்பட்டு, கராச்சி நகர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி டி.ஐ.ஜி. ஆசாத் ரஜா கூறும்போது, குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கை நடந்து வருகிறது. விரைவில் அவர்களை கைது செய்வோம் என கூறியுள்ளார்.
கராச்சி நகரில் தெருக்களில் இதுபோன்ற கொள்ளை முயற்சி சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. கராச்சியில் நடப்பு ஆண்டில், கொள்ளை முயற்சி சம்பவத்தில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.