விமானத்தில் செல்ல, ஓட்டலில் தங்க பாகிஸ்தான் மந்திரிகளுக்கு கட்டுப்பாடுகள்
|பாகிஸ்தான் மந்திரிகள் அலுவலக ரீதியாக பயணம் செல்லும்போது, விமானங்களில் பிசினஸ் வகுப்புகளில் பயணிக்கவும், 5 நட்சத்திர ஓட்டல்களில் தங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வரும் பாகிஸ்தான் சர்வதேச நிதியத்திடம் இருந்து பெரும் தொகையை கடனாக பெற முயன்று வருகிறது. ஆனால் கடன் வழங்க சர்வதேச நிதியம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளதால் ஒப்பந்தத்தை எட்டுவதில் இழுபறி நீடிக்கிறது. இதனிடையே பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் மந்திரிகள் அலுவலக ரீதியாக பயணம் செல்லும்போது, விமானங்களில் பிசினஸ் வகுப்புகளில் பயணிக்கவும், 5 நட்சத்திர ஓட்டல்களில் தங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனது தலைமையில் நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்துக்கு பின்னர் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இதனை அறிவித்தார்.
மேலும், மந்திரி சபை உறுப்பினர்களின் சம்பளம், பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் சலுகைகளை திரும்பப் பெறுதல்; ஆடம்பர பொருட்கள் மற்றும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தடை; ஒரு அரசு ஊழியருக்கு ஒரே ஒரு வீட்டு மனை; அரசு அதிகாரிகளின் ஆடம்பரமான வீடுகளை விற்பது ஆகிய சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடிவு எடுக்கப்பட்டதாக ஷபாஸ் ஷெரீப் கூறினார். இந்த நடவடிக்கைகள் உடனடியாக செயல்படுத்தப்படும் என்றும் புதிய நிதியாண்டுக்கான பட்ஜெட்டின் போது கூடுதல் சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.