ஈரான் மீது பாகிஸ்தான் அதிரடி தாக்குதல்; 9 பேர் பலி
|ஈரானை சகோதர நாடு என பாகிஸ்தான் கூறி வந்த நிலையில், இந்த தாக்குதல் உலக நாடுகள் மத்தியில் ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளது.
தெஹ்ரான்,
பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட சன்னி பிரிவை சேர்ந்த ஜெய்ஷ் அல்-அடில் என்ற பயங்கரவாத அமைப்பை இலக்காக கொண்டு ஈரான் அரசு, ராக்கெட் மற்றும் ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தானின் மேற்கு பகுதியில் பலூசிஸ்தானில் நடந்த இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர் என இஸ்லாமாபாத் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சூழலில், ஈரானுக்கு எதிராக பாகிஸ்தான் இன்று தாக்குதலில் ஈடுபட்டது. இதன்படி, ஈரானின் சப்பார் பகுதியை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என பாகிஸ்தான் டெய்லி பத்திரிகை தெரிவிக்கின்றது. இதில், ஈரான் நாட்டு பகுதியில் அமைந்த பயங்கரவாத முகாம்களை இலக்காக கொண்டு வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என்று பாகிஸ்தான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் பாகிஸ்தானில் நடந்த இந்த தாக்குதல் எதிரொலியாக ஈரானுக்கான தன்னுடைய தூதரை பாகிஸ்தான் திரும்ப அழைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தது. ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்கு திரும்ப இருந்த ஈரான் தூதருக்கான அனுமதியையும் மறுத்தது. இது சட்டவிரோத தாக்குதல் என்றும் கண்டனம் தெரிவித்தது.
எனினும், பாகிஸ்தான் மண்ணில் உள்ள ஈரான் பயங்கரவாதிகளையே நாங்கள் தாக்கினோம் என்று ஈரான் பதிலளித்தது. ஈரான், தன்னுடைய தற்காப்புக்காக இந்த தாக்குதலை நடத்தி உள்ளது என்பது புரிந்து கொள்ள முடிகிறது என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், ஈரான் மீது பாகிஸ்தான் நடத்திய அதிரடி தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர். ஈரானை ஒரு சகோதர நாடு என்று பாகிஸ்தான் கூறி வந்த நிலையில், அந்நாடுகளுக்கு இடையே நடந்த இந்த தாக்குதல் உலக நாடுகள் மத்தியில் ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளது.
ஈரானின் இறையாண்மையை முழு அளவில் நாங்கள் மதிக்கிறோம் என கூறியுள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், இன்றைய தாக்குதலானது, பாகிஸ்தானின் சொந்த பாதுகாப்பு மற்றும் தேச நலனின் தொடர்ச்சியாகும். அதில் சமரசம் என்பது செய்து கொள்ள முடியாத ஒன்று என்றும் தெரிவித்து உள்ளது.