< Back
உலக செய்திகள்
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்ற தயார் என்ற இந்திய ராணுவ மூத்த தளபதி - மாயை என்று கூறிய பாகிஸ்தான்
உலக செய்திகள்

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்ற தயார் என்ற இந்திய ராணுவ மூத்த தளபதி - 'மாயை' என்று கூறிய பாகிஸ்தான்

தினத்தந்தி
|
25 Nov 2022 11:04 PM GMT

ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்றுவோம் என்று இந்திய ராணுவ மூத்த தளபதி கூறுவது மாயை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

லாகூர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஸ்ரீநகரில் கடந்த மாதம் 27-ம் தேதி மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகிறது. இதற்கான விலையை இஸ்லாமாபாத் ஒருநாள் கண்டிப்பாக கொடுத்தாக வேண்டும்' என்றார்.

இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய ராணுவத்தின் வடக்கு பிரிவு தளபதி உபேந்திர திவேதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது தொடர்பாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அந்த கேள்விக்கு பதிலளித்த ராணுவ தளபதி, இந்திய ராணுவத்தை பொறுத்தவரை இந்திய அரசாங்கம் கொடுக்கும் எத்தகைய உத்தரவையும் செயல்படுத்த தயாராக உள்ளோம். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது குறித்து உத்தரவு கொடுக்கப்பட்டால் அதை செயல்படுத்த இந்திய ராணுவம் எப்போதும் தயாராக உள்ளது' என்றார்.

இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்பு தொடர்பாக இந்திய ராணுவ தளபதி கூறிய கருத்து குறித்து பாகிஸ்தான் ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித்தொடர்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரவிட்டால் காஷ்மீரின் எஞ்சிய பகுதியை கைப்பற்ற இந்திய ராணுவம் தயார் என்ற இந்திய ராணுவ மூத்த தளபதி திவேதியின் பேச்சு கனவு போன்ற லட்சியம். மேலும் அது அறிவார்ந்த அவமதிப்பு. அவரது பேச்சு ஒரு மாயை' என்று தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்