பாகிஸ்தான்: கராச்சியில் 70% இளைஞர்கள் விபத்துகளில் சிக்குகின்றனர்; நிபுணர்கள் தகவல்
|பாகிஸ்தானில் மோட்டார் வாகன ஓட்டிகள் பலரும் பயிற்சியை முறையாக பெறுவதோ, ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பதோ இல்லை என்றும் கூறியுள்ளார்.
கராச்சி,
பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் அந்நாட்டின் ஆர்த்தோபீடிக் கூட்டமைப்பு சார்பில் 2 நாள் கருத்தரங்கம் நடந்தது. இதில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், கராச்சி நகரில் தினமும் மோட்டார் வாகனங்களில் சென்று விபத்துகளில் சிக்கி அவசர சிகிச்சை பிரிவில் சேருபவர்களின் எண்ணிக்கை 500 ஆக உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவர்களில் 70 சதவீதம் பேர் இளைஞர்கள். விபத்துகளில் சிக்குபவர்களுக்கு அதிக செலவிலான சிகிச்சை, அறுவை சிகிச்சைகள் தேவைப்படுகின்றன. அதன்பின்னர் தினமும் மருந்து எடுத்து கொள்ள வேண்டிய சூழலும் ஏற்படுகிறது.
இதனால், இளைஞர்களின் வாழ்க்கையே மாறி விடுகிறது என நிபுணர்கள் தெரிவித்தனர். இதுபற்றி அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் பேராசிரியரான பத்ருதீன் சஹிதோ கூறும்போது, கராச்சி நகரை சேர்ந்த 500 பேர் வரை ஒவ்வொரு நாளும் சாலை போக்குவரத்து விபத்துகளில் சிக்குகின்றனர்.
இதில், காயமடைபவர்களை நோய் தாக்குதல்களுக்கு ஆளானவர்கள் என கருத்தில் கொள்வதில்லை. அதனால், பாகிஸ்தானில் சாலை விபத்துகளில் மக்கள் காயம் ஏற்படாத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளார்.
போக்குவரத்து விதிகளை கடுமையாக பின்பற்றினால் இளைஞர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் எதிர்கால பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும். கோடிக்கணக்கான மதிப்பிலான பணமும் மிச்சப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
நாட்டில் சாலை விதிகளை முறையாக பின்பற்றுவது அவசியம் என்று கூறிய சஹிதோ, மோட்டார் வாகன ஓட்டிகள் பலரும் பயிற்சியை முறையாக பெறுவதோ, ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பதோ இல்லை என்றும் கூறியுள்ளார்.