பாகிஸ்தான்: ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 6 பேர் பலி
|பாகிஸ்தானில் இன்று மதியம் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் 21 பேர் இருந்தனர். அவர்களில் 6 பேர் விமானிகள். இதுதவிர, ஒரு பாதுகாப்பு அதிகாரி மற்றும் 14 பயணிகள் இருந்தனர்.
வடக்கு வசீரிஸ்தான்,
பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகரில் இன்று காலை 11.15 மணியளவில் மி-8எம்.டி.வி.-1 ரக ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு ஷீவா நகர் நோக்கி சென்றது. இதன்பின்பு, மதியம் 1.15 மணியளவில் ஹெலிகாப்டரில் இருந்த பயணிகளில் ஒருவர் இறங்கினார்.
இதன்பின்பு பன்னு நகர் நோக்கி ஹெலிகாப்டர் புறப்பட்டபோது, திடீரென அதன் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால், ஷீவா நகரில் ஹெலிகாப்டர் மீண்டும் அவசர தரையிறக்கம் செய்ய வேண்டியிருந்தது.
அப்போது, அதன் வால் பகுதியில் இருந்த மின்விசிறியின் இறக்கை ஒன்று தரையில் மோதி விபத்தில் சிக்கியது. அந்த ஹெலிகாப்டரில் 21 பேர் இருந்தனர். அவர்களில் 6 பேர் விமானிகள். இதுதவிர, ஒரு பாதுகாப்பு அதிகாரி மற்றும் 14 பயணிகள் இருந்தனர்.
இதனை தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணி தொடங்கியது. இந்த விபத்தில் 6 பேர் பலியானார்கள். காயமடைந்த நபர்களை மீட்க பெஷாவரில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது.