இந்திய பிரதமராக பதவியேற்ற மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் வாழ்த்து
|இந்திய பிரதமராக பதவியேற்றுள்ள மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
லாகூர்,
இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றது. இதையடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் மத்தியில் ஆட்சியமைக்க உரிமைகோரினார். இதையடுத்து, மோடியை ஆட்சியமைக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைப்பு விடுத்தார்.
அதன்படி, ஜனாதிபதி மாளிகையில் நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றது. அதில், மோடி 3வது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்றார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, மோடிக்கு பதவி பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன் 71 மத்திய மந்திரிகள் பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்பு விழாவில் இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, வங்காளதேசம் உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள பாகிஸ்தான் பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இதனிடையே, 3வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள மோடிக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய பிரதமராக பதவியேற்றுள்ள மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஷபாஸ் ஷெரீப் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இந்திய பிரதமராக பதவியேற்றுள்ள மோடிக்கு வாழ்த்துக்கள்' இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.