< Back
உலக செய்திகள்
இலங்கையில் 80 சதவீத குடும்பங்களுக்கு போதிய உணவு கிடைக்கவில்லை - ஐ.நா. கவலை

கோப்புப்படம்

உலக செய்திகள்

இலங்கையில் 80 சதவீத குடும்பங்களுக்கு போதிய உணவு கிடைக்கவில்லை - ஐ.நா. கவலை

தினத்தந்தி
|
16 Jun 2022 5:49 AM IST

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் 80 சதவீத குடும்பங்களுக்கு போதிய உணவு கிடைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கொழும்பு,

இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி மக்களின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதித்து வருகிறது. அதிகரித்து வரும் உணவு தட்டுப்பாடும், கடுமையான விலைவாசி உயர்வும் மக்களின் பட்டினியை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மக்களின் வாழ்க்கை சூழலை எவ்வாறு பாதித்து இருக்கிறது? என ஐ.நா. அங்கு ஆய்வு நடத்தியது. குறிப்பாக ஐ.நா.வின் உலக உணவு திட்டமும், இலங்கையின் தேசிய திட்டமிடல் துறையும் இணைந்து நடத்திய இந்த ஆய்வில் அதிர்ச்சிகரமான முடிவுகள் வெளியாகி உள்ளன.

அந்தவகையில் இலங்கையில் விலைவாசி உயர்வு மற்றும் மக்களின் வாங்கும் திறன் குறைந்ததால் 80 சதவீதத்துக்கு அதிகமான குடும்பங்கள், மலிவான உணவுகள், விருப்பமில்லாத உணவுகள் அல்லது குறைவான உணவுகளையே தினந்தோறும் உண்டு வருவது கண்டறியப்பட்டு உள்ளது.

சத்தான உணவுகளை குறைவாகவே மக்கள் உண்பதால் ஊட்டச்சத்து குறைபாடு அபாயம் ஏற்பட்டு இருப்பதும் தெரியவந்து உள்ளது.

இலங்கையில் கடந்த 2 பருவங்களில் விளைச்சல் குறைந்ததால் விலைவாசி அதிகரித்து இருப்பதும், இறக்குமதி அரிசியின் விலை 20 சதவீதம் அதிகரித்து இருப்பதும் இதற்கு காரணமாக ஆய்வில் கண்டறியப்பட்டு இருக்கிறது.

ஐ.நா.வின் இந்த ஆய்வறிக்கை இலங்கை ஊடகங்களில் வெளியாகி நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இலங்கை கடும் எரிபொருள் தட்டுப்பாட்டில் சிக்கியிருக்கும் நிலையில், வருகிற நாட்களில் நாட்டின் 50 சதவீத தேவையை பூர்த்தி செய்ய முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

350 கோடி டன் கியாஸ் நிரப்பிய கப்பல் ஒன்று வந்து சேர்ந்து உள்ளது. ஆஸ்பத்திரிகள், மயானங்கள் மற்றும் ஓட்டல்கள் போன்ற மொத்தமாக வாங்குவோருக்கு மட்டுமே இதை வினியோகிப்போம்.

பின்னர் நான்கு மாதங்களுக்கு தேவையான கியாஸ் தொகுப்பை பெறுவோம். அவற்றை பாதுகாக்க 14 நாட்கள் ஆகும். அதுபோல இன்னும் சில தொகுப்புகள் விரைவில் கிடைக்கும் என நம்புகிறோம்.

தற்போது 7 நாட்களுக்கு தேவையான எரிபொருள் நம்மிடம் இருப்பு உள்ளது. எனினும், வரும் வாரங்களில் 4 ஆயிரம் கோடி டன் எரிபொருளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவுடன் கையெழுத்திட உள்ள ஒப்பந்தத்துக்கு பின்னர் எரிபொருள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் நாட்டின் தேவையில் 50 சதவீதத்தை எப்படியும் வழங்க முடியும்.

அன்னிய செலாவணி நெருக்கடி மட்டுமின்றி இலங்கை ரூபாயின் பற்றாக்குறையும் உள்ளது. நான் ஏற்கனவே சர்வதேச நிதிய நிர்வாக இயக்குனரிடம் பேசியுள்ளேன். அவர் உதவியை விரைவுபடுத்துவதாக உறுதியளித்துள்ளார்.

மேலும், அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனும் இலங்கைக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளார். இவ்வாறு நமது நிலைமையை உலகம் முழுவதும் கவனித்து வருவதுடன், உதவுவதற்கும் தயாராகி வருகிறது என்று ரணில் விக்ரமசிங்கே கூறினார்.

மேலும் செய்திகள்