< Back
உலக செய்திகள்
ரஷிய ராணுவத்துக்கு வீரர்களை திரட்ட அதிபர் புதின் உத்தரவு: பொதுமக்கள் கடும் எதிர்ப்பு! 1,300க்கும் மேற்பட்டோர் கைது!

Image Credit:AP/Reuters

உலக செய்திகள்

ரஷிய ராணுவத்துக்கு வீரர்களை திரட்ட அதிபர் புதின் உத்தரவு: பொதுமக்கள் கடும் எதிர்ப்பு! 1,300க்கும் மேற்பட்டோர் கைது!

தினத்தந்தி
|
22 Sept 2022 2:33 PM IST

ரஷியாவில் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் முதல் முறையாக ராணுவத்துக்காக அணிதிரட்டல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாஸ்கோ,

ரஷியாவில் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் முதல் முறையாக ராணுவத்துக்காக அணிதிரட்டல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மனியின் நாசிச படைகளை எதிர்த்துப் போரிட மிக அதிக எண்ணிக்கையிலான ராணுவ வீரர்களை போருக்குத் திரட்ட உத்தரவிடப்பட்டது. அது போன்ற நடவடிக்கை ரஷ்யாவில் நேற்று தொடங்கியது. அதன்படி ராணுவத்துக்காக மிகப் பெரிய எண்ணிக்கையிலான வீரர்களைத் திரட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நாட்டு மக்களிடம் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று தொலைக்காட்சி வாயில் நிகழ்த்திய உரையில், ரஷிய ராணுவத்திற்கான அணி திரட்டல் இன்று முதல் தொடங்குகிறது. ராணுவத்தில் பணியாற்றி, பயிற்சிபெற்று தற்போது வேறு பணிகளில் உள்ள நாட்டு மக்கள் ராணுவ பணிக்கு மீண்டும் அழைக்கப்படுவார்கள்.

ரஷியாவை பலவீனப்படுத்தவும், பிரிக்கவும், அழிக்கவும் மேற்கத்திய நாடுகள் முடிவு எடுத்துள்ளது. பதிலடி கொடுக்க நம்மிடம் ஏராளமான ஆயுதங்கள் உள்ளன. தங்கள் சொந்த எதிர்காலத்தை தீர்மானிக்க வீரர்களுக்கு ஆதரவு வழங்கப்படும். ரஷியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் எந்த எல்லைக்கும் செல்ல நாங்கள் தயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, அதிபர் புதினின் தொலைக்காட்சி உரைக்குப் பின்னர் பேட்டியளித்த, அந்நாட்டு பாதுகாப்புத் துறை மந்திரி செர்கே சோய்கு, "ரஷியாவில் கூடுதலாக 3 லட்சம் வீரர்கள் போருக்கு திரட்டப்படுவர்" என்று தெரிவித்தார்.

இதனால் உக்ரைன் போரின் தாக்கம் மற்றும் பாதிப்பு மேலும் தீவிரமாகக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மறுமுனையில், ராணுவத்துக்காக மிகப் பெரிய எண்ணிக்கையிலான வீரர்களைத் திரட்ட வேண்டுமென்ற அதிபர் விளாடிமிர் புதினின் அறிவிப்புக்கு எதிராக, ரஷியா முழுவதும் நேற்று நடந்த ஆர்ப்பாட்டங்களில் 1,300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 38 வெவ்வேறு நகரங்களில் நடந்த பேரணிகளில் குறைந்தது 1,332 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்களின் கருத்துக்களை செய்தியாக அளித்த ஏ.எப்.பி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:- "இந்த ஆட்சி தன்னைத் தானே கண்டித்து, அதன் இளமையை அழித்து வருகிறது" என்று 60 வயதான முதியவர் கூறினார்.

"20 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் புதினுக்கு நீங்கள் ஏன் சேவை செய்கிறீர்கள்!" என்று ஒரு இளம் போராட்டக்காரர் ஒரு போலீஸ்காரரிடம் கத்தினார்.

"நான் போர் மற்றும் அணிதிரட்டலுக்கு எதிரானவன் என்று சொல்ல வந்தேன். என் எதிர்காலத்தை எனக்காக நீங்கள்ஏன் தீர்மானிக்கிறார்கள்? எனக்காகவும், என் சகோதரனைப் பற்றியும் நான் பயப்படுகிறேன்" என்று பெண் போராளி ஒருவர் கூறி உள்ளார்.

"உக்ரைனில் தற்போது நடக்கும் ரஷியாவின் தாக்குதலின் தன்மையை ரஷியர்கள் விரைவில் புரிந்துகொள்வார்கள். அப்போது, அவர்கள் உண்மையில் புரிந்து கொண்டவுடன், பயம் இருந்தபோதிலும், தெருவுக்கு வந்து போராடுவார்கள்" என்று இளம்பெண் ஒருவர் கூறி உள்ளார்.

மேலும், நேற்றிலிருந்து ரஷியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களில் இருக்கைகள் முன்பதிவு செய்யப்படும் விகிதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலர் தங்கள் நாட்டை விட்டு வெளியேற முடிவெடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்