சீனாவை மிரட்டும் வானிலை.. பனி படர்ந்த எக்ஸ்பிரஸ் சாலையில் 100-க்கும் மேற்பட்ட கார்கள் மோதி விபத்து
|வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி, ஒரே இடத்தில் குவிந்து கிடந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
பீஜிங்:
சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது. அத்துடன், பனிப்புயல் மற்றும் பனி மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பனி சூழ்ந்துள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மோசமான காலநிலையையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான மக்கள் சந்திர புத்தாண்டு விடுமுறையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு சென்றவண்ணம் உள்ளனர். மோசமான வானிலைக்கு மத்தியில் பயணிப்பதால் ஆங்காங்கே விபத்து ஏற்படுகிறது.
இந்நிலையில், சுஜோ நகரில் உள்ள எக்ஸ்பிரஸ் சாலையில் பனிமழை பெய்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். பனி படர்ந்த அந்த சாலை வழியாக பயணித்த சில வாகனங்கள் பிரேக் பிடிக்காமல் சறுக்கிக்கொண்டே சென்று விபத்துக்குள்ளாகின. பின்னால் வந்த வாகனங்களும் பனியில் சறுக்கிக்கொண்டு அவற்றின் மீது மோதி சேதமடைந்தன.
இவ்வாறு 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி, ஒரே இடத்தில் குவிந்து கிடந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர். போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தினர்.