ஜப்பானில் அரிய வகை நோய் பரவல்; 2 நாளில் மரணம் நிச்சயம்
|ஜப்பானில், நடப்பு ஆண்டில் இந்த நோய் பாதிப்பு எண்ணிக்கை 2,500 ஆக அதிகரித்து அதனால், 30 சதவீதம் அளவுக்கு இறப்பு விகிதம் இருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.
டோக்கியோ,
ஜப்பான் நாட்டில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது. கடந்த 2-ந்தேதி இந்த மர்ம நோய், ஜப்பானை தாக்கிய விவரம் தெரிய வந்துள்ளது.
எஸ்.டி.எஸ்.எஸ். எனப்படும் ஸ்டிரெப்டோகாக்கல் டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம் என்ற இந்த வகை நோய் தொற்றால் இதுவரை மொத்தம் 977 பேருக்கு பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 941 ஆக இருந்தது.
இந்த நோயானது, உடல் பகுதியை சாப்பிட கூடிய பாக்டீரியாவால் ஏற்பட கூடியது. மனிதர்களை 48 மணிநேரத்தில் கொல்லும் சக்தி படைத்தது. இந்த நோயானது ஜப்பானில் பரவி வருகிறது.
இதன் பாதிப்பால், வீக்கம் மற்றும் தொண்டையில் வலி ஏற்படும். சில பேருக்கு, காலில் வலி, வீக்கம், காய்ச்சல் மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் உள்ளிட்ட அறிகுறிகள் விரைவாக ஏற்படும்.
இதன்பின்னர், சுவாச பாதிப்பு, உடல் உறுப்புகள் செயலிழப்பு மற்றும் மரணம் ஆகியவை ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி டோக்கியோ மகளிர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் தொற்று நோய்களுக்கான பேராசிரியர் கென் கிகுசி கூறும்போது, பெருமளவில் 48 மணிநேரத்தில் உயிரிழப்பு ஏற்பட்டு விடும்.
காலையில் நோயாளியின் காலில் வீக்கம் கண்டறியப்பட்டால், மதியம் அது முழங்காலுக்கும் பரவி, 2 நாட்களில் அவர்கள் உயிரிழந்து விடுவார்கள்.
ஜப்பானில் இந்த விகிதத்தில் பரவி வரும் தொற்றுகளால், நடப்பு ஆண்டில் பாதிப்பு எண்ணிக்கை 2,500 ஆக அதிகரிக்க கூடும். 30 சதவீதம் அளவுக்கு இறப்பு விகிதம் இருக்க கூடும் என்றும் கிகுசி கூறியுள்ளார்.
இதனால், கைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று மக்களை அறிவுறுத்தி உள்ளார். சமீபத்தில், ஜப்பான் தவிர்த்து, வேறு சில நாடுகளிலும் இந்த நோயின் பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன.