< Back
உலக செய்திகள்
தாய்லாந்து சென்ற இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ஓட்டல் அறையிலேயே தங்கியிருக்க உத்தரவு

Image Courtacy:AFP

உலக செய்திகள்

தாய்லாந்து சென்ற இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ஓட்டல் அறையிலேயே தங்கியிருக்க உத்தரவு

தினத்தந்தி
|
13 Aug 2022 9:15 AM IST

சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து சென்ற இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பாதுகாப்பு கருதி ஓட்டலிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாங்காக்,

அரசியல் போராட்டம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, முதலில் மாலத்தீவுக்கும், பின்னர் சிங்கப்பூருக்கும் சென்றார்.

சிங்கப்பூரில் கோத்தபயவுக்கான அனுமதி காலம் நேற்று முன்தினம் முடிந்தநிலையில், அவரது வேண்டுகோளை ஏற்று தாய்லாந்தில் தற்காலிகமாக தங்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது.

அதையடுத்து நேற்று முன்தினம் இரவு ஒரு தனி விமானம் மூலம் கோத்தபய ராஜபக்சே, பாங்காக்கில் உள்ள ராணுவ விமான தளத்தில் வந்து இறங்கினார். அவருடன் மேலும் 3 பேர் வந்தனர்.

கோத்தபய முதலில் புகெட் நகரில் உள்ள விமான நிலையத்தில் வந்திறங்க முடிவு செய்திருந்தார். ஆனால் அதுகுறித்த தகவல் கசியக்கூடும் என்பதால் அந்த திட்டம் மாற்றப்பட்டது.

பாங்காக் ராணுவ விமான தளத்தில் இருந்து, பெயர் வெளியிடப்படாத ஓட்டலுக்கு கோத்தபய ராஜபக்சே அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு, சாதாரண உடையில் உள்ள தாய்லாந்து சிறப்பு பிரிவு போலீசார் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு கருதி, ஓட்டலிலேயே தங்கியிருக்கும்படியும், வெளியே செல்ல வேண்டாம் என்றும் கோத்தபயவை தாய்லாந்து அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கோத்தபய ராஜபக்சே தாய்லாந்தில் 90 நாட்கள் வரை தங்கியிருக்க முடியும் என்பதால், அதற்கு பிறகு நவம்பரில் வேறொரு 3-வது நாட்டில் தஞ்சம் கோருவார் அல்லது இலங்கை திரும்புவார் என்று கூறப்படுகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் புகலிடம் பெறுவதற்கு கோத்தபய தரப்பில் இருந்து பலமுறை கோரிக்கை விடுத்தும் சாதகமான பதில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்