ஜெப ஆலய பயங்கரவாத தாக்குதல்: எங்களின் பதிலடி வலுவாகவும், வேகமாகவும் இருக்கும் - இஸ்ரேல் பிரதமர்
|எங்களின் பதிலடி வலுவாகவும், வேகமாகவும், துல்லியமாகவும் இருக்கும் என்று ஜெருசலேம் ஜெப ஆலய பயங்கரவாத தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கருத்து தெரிவித்தார்.
ஜெருசலேம்,
இஸ்ரேல்-பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையில் மிக நீண்டகாலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது.
1967-ல் நடந்த மத்திய கிழக்கு போரின் போது பாலஸ்தீனத்தின் ஜெருசலேம் மற்றும் மேற்குகரை பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்து கொண்டது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் கடும் மோதல் தொடர்ந்து வருகிறது.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஜெருசலேம் மற்றும் மேற்குகரை பகுதிகளில் பாலஸ்தீனத்தை சேர்ந்த போராளிகள் இஸ்ரேலில் அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இவர்களை ஒடுக்க இஸ்ரேல் அங்கு தீவிர ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை மேற்குகரை பகுதியில் உள்ள பாலஸ்தீன போராளிகளின் ஆதிக்கம் மிகுந்த ஜெனின் அகதிகள் முகாமுக்குள் புகுந்து இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 61 வயது மூதாட்டி உள்பட 9 பேர் பலியாகினர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் நகரங்கள் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்கினர். அதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நீடிக்கிறது.
இந்த நிலையில் ஜெருசலேமின் கிழக்கு பகுதியில் நெவ் யாகோவ் நகரில் உள்ள யூத வழிப்பாட்டு தலம் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு யூதர்கள் பலர் வழிபாடு நடத்தி கொண்டிருந்தனர்.
அப்போது கையில் துப்பாக்கியுடன் வழிபாட்டு தலத்துக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வழிபாட்டு தலத்தில் இருந்த அனைவரும் அலறியடித்தபடி சிதறி ஓடினர்.
ஆனாலும் அந்த மர்ம நபர் சுடுவதை நிறுத்தாமல் கண்ணில்பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவதுபோல சுட்டுத்தள்ளினார்.
இதில் 8 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதனிடையே இந்த துப்பாக்கிச்சூடு குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட நபரை சுட்டுக்கொன்றனர்.
முதற்கட்ட விசாரணையில் அவர் கிழக்கு ஜெருசலேமை சேர்ந்த பாலஸ்தீனர் என்பது தெரியவந்துள்ளதாக இஸ்ரேல் போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக 42 பேரை கைது செய்துள்ளதாகவும் போலீசார் கூறினர்.
இந்நிலையில் ஜெருசலேம் ஜெப ஆலய பயங்கரவாத தாக்குதலுக்கான எங்களின் பதிலடி வலுவாகவும், வேகமாகவும், துல்லியமாகவும் இருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், "ஜெருசலேம் ஜெப ஆலயத் தாக்குதலில் கொல்லப்பட்ட 8 நபர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். பயங்கரவாத ஆதரவாளர்கள் மற்றும் வன்முறையைத் தூண்டுபவர்களை ஏற்கனவே விரிவான கைது செய்யத் தொடங்கியுள்ளோம். யார் நம்மை காயப்படுத்த முயன்றாலும் அவரையும், அவருக்கு உதவுபவர்களையும் நாங்கள் காயப்படுத்துவோம்" என்றும் அவர் கூறினார்.