விமானத்தின் அவசரகால கதவை திறந்து இறக்கை மீது நடந்த பயணி.. சக பயணிகள் ஆதரவு: காரணம் இதுதான்..!
|காற்றோட்டம் இல்லாமல் தவித்த நிலையில், அந்த பயணி அனைவரையும் பாதுகாப்பதற்காகவே அவசரகால கதவை திறந்ததாக சக பயணிகள் கூறுகின்றனர்.
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோ சிட்டி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் கவுதமாலா நாட்டிற்கு ஏரோமெக்சிகோ பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. ஆனால் பயணிகள் ஏறி அமர்ந்து நீண்ட நேரம் ஆகியும் புறப்படவில்லை. பராமரிப்பு பணி தொடர்பான எச்சரிக்கை காரணமாக புறப்படுவதில் தாமதம் ஆனது.
இந்நிலையில், விமானத்தில் இருந்த பயணிகளில் ஒருவர், அவசரகால கதவை திறந்துகொண்டு வெளியேறி, விமானத்தின் இறக்கையில் நடந்து சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை விமான நிலைய ஊழியர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ஆனால் அவர் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறி அவருக்கு ஆதரவாக சக பயணிகள் குரல் கொடுத்தனர். விமானம் தாமதம் ஆனதால் கிட்டத்தட்ட 4 மணி நேரம் காற்றோட்டம் இல்லாமல் தவித்த நிலையில், அந்த பயணி அனைவரையும் பாதுகாப்பதற்காகவே அவசரகால கதவை திறந்தார் என்று கூறினர். இதுதொடர்பாக ஏராளமான பயணிகள் எழுதி கையெழுத்திட்ட அறிக்கை மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக விமான நிலையம் விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
கவுதமாலாவுக்கு புறப்படவிருந்த விமானத்தின் அவசரகால கதவை ஒரு பயணி திறந்து வெளியேறி, விமான இறக்கையில் நின்றதுடன், சிறிது நேரம் கழித்து உள்ளே சென்றார். விமானத்தையோ அல்லது வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தவில்லை. எனினும், சர்வதேச பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதால் அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அவசரகால கதவை திறந்து வெளியேறிய பயணி யார்? என்பது குறித்த அடையாளம் வெளியிடப்படவில்லை. அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதா? என்ற தகவலும் வெளியாகவில்லை.
அந்த விமானம் 4 மணிநேரம் 56 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றுள்ளது. விமானத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோவில், பயணிகள் விசிறிக்கொண்டு விமானப் பணிப்பெண்ணிடம் தண்ணீர் கேட்பதை காண முடிகிறது.