< Back
உலக செய்திகள்
பாகிஸ்தானில் தலைவர்களை விடுதலை செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் தலைவர்களை விடுதலை செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்

தினத்தந்தி
|
27 July 2024 4:35 AM GMT

பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உள்பட அனைத்து கட்சி தலைவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 71) மீது பணமோசடி, ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதனையடுத்து தோஷகானா ஊழல் வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானது.அதன்பேரில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி கைது செய்யப்பட்ட அவர் ராவல்பிண்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரது மனைவி புஷ்ரா பீபியும் (வயது 49) ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

இதற்கிடையே இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு தடை விதிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் ஒருபகுதியாக தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்குள் போலீசார் அத்துமீறி நுழைந்து சோதனை நடத்தினர். மேலும் அந்த கட்சியின் செய்தித்தொடர்பாளர் அஹ்மத் ஜன்ஜுவா மற்றும் பெண் தொண்டர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கு இம்ரான்கான் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்தநிலையில் இம்ரான்கான் உள்பட சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சி தலைவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டத்துக்கு பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் தலைநகர் இஸ்லாமாபாத் செல்லும் நெடுஞ்சாலையையும் போலீசார் பகுதியளவு மூடினர்.

எனினும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி உள்பட பல்வேறு கட்சியினர் நேற்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எனவே போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்