ஒரு நாள்... ரஷியாவை போன்று அமெரிக்காவும் உடையும்; ஹமாஸ் கணிப்பு
|வடகொரியாவும் எங்களுடைய கூட்டணியின் ஒரு பகுதியாக உள்ளனர் என்று ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது.
பெய்ரூட்,
இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த அக்டோபர் 7-ந்தேதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்தது. இசை திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் உள்பட எல்லை பகுதியில் தங்கியிருந்தவர்களை கடுமையாக தாக்கி வன்முறையில் ஈடுபட்டது.
இந்த சம்பவத்தில், 260 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். அந்த அமைப்பு 210 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது என அப்போது தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறும்போது, காசாவில் 241 இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பணய கைதிகள் ஹமாஸ் பயங்கரவாதிகளின் பிடியில் உள்ளனர் என அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டார்.
இந்த சூழலில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த அதிகாரி அலி பராகா, லெபனான் நாட்டு யூ-டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின்போது, அமெரிக்காவானது, பிரிட்டனால் தோற்றுவிக்கப்பட்டது. ரஷியாவை போன்று அமெரிக்காவும் ஒரு நாள் உடையும் என கூறியுள்ளார்.
அமெரிக்காவின் எதிரிகள் அனைவரும் இந்த பகுதியில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் நெருங்கி வருகின்றனர். எப்போது, போரில் அமெரிக்கா இணைகிறதோ, அதன்பின் அமெரிக்கா கடந்த கால விசயங்களில் ஒன்றாக மாறிவிடும் என்று அவர் கூறியுள்ளார். அமெரிக்கா, சக்தி படைத்த நாடாக தொடர்ந்து இருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து, அமெரிக்காவை தாக்க கூடிய திறன் வடகொரியாவுக்கு உள்ளது என கூறியதுடன், அவர்களும் எங்களுடைய கூட்டணியின் ஒரு பகுதியாக உள்ளனர் என்றும் கூறியுள்ளார். சமீபத்தில் ஹமாஸ் அமைப்பினர் ரஷியாவுக்கு சென்றனர். சீனாவுக்கும் பயணம் செய்வார்கள் என்று அவர் கூறியுள்ளார். இதனை ஜெருசலேம் போஸ்ட் தெரிவித்து உள்ளது.