எதிர்க்கட்சிக் கூட்டணியின் பெயர் என்பதால் பாஜகவுக்கு "இந்தியா" என்ற பெயர் எரிச்சலூட்டுகிறது - ராகுல் காந்தி
|எதிர்க்கட்சிக் கூட்டணியின் பெயர் என்பதால் பாஜகவுக்கு “இந்தியா” என்ற பெயர் எரிச்சலூட்டுவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பாரிஸ்,
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆராய்ச்சி மாணவர்கள் உட்பட பல நாட்டு மாணவர்களுடன் ராகுல் காந்தி உரையாடினார். அப்போது வெளிநாட்டு மற்றும் இந்திய மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ராகுல்காந்தி பதிலளித்து பேசினார்.
அதில் பேசிய அவர், "இந்திய அரசியல் சாசனத்தில் இந்தியா, பாரத் ஆகிய இரண்டு சொற்களுமே உள்ளன. அதனால் எங்களுக்கு அந்த இரண்டு சொற்களின் பயன்பாட்டிலுமே எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் சூட்டப்பட்டதால் பாஜகவுக்கு இந்தியா என்ற பெயர் எரிச்சலூட்டுகிறது. அதனாலேயே அவர்கள் பெயரை மாற்ற முற்படுகிறார்கள்.
இந்தியாவில் ஆளும் அரசு அதிகாரத்திற்காக எந்த விலையையும் கொடுக்க தயாராக இருக்கிறது. 40 வருடங்களில் இல்லாத வகையில் வேலையின்மை விகிதம் மிக அதிகளவில் உயர்ந்துள்ளது. இந்து என்று பாஜக சொல்லும் எவையும் உண்மையில் இந்து மதத்தில் இல்லை. தங்களை விட பலவீனமானவர்களை துன்புறுத்த வேண்டும் என இந்து மதத்தில் சொல்லப்படவில்லை.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் செயல்பாடுகளுக்கும் இந்து மதத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. கீதையை நான் படித்து விட்டேன். என்னிடம் பல உபநிடதங்கள் உள்ளன. பல இந்து புத்தகங்களை படித்து விட்டேன். நாட்டில் மிகப்பெரிய அளவில் சமத்துவமின்மை நிலவுகிறது. ஆட்சி அதிகாரம் பட்டியலினத்தை சேர்ந்தவருக்கு எந்த இடமும் வழங்கப்படுவதில்லை. பட்டியலினத்தோர், ஒபிசி, சிறுபான்மை, பழங்குடியினர் ஒடுக்கப்படுகின்றனர். எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்த வேண்டும் என நினைக்கின்றனர். நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை பாதுகாப்பதற்கான போராட்டம் தொடரும்" என்று ராகுல்காந்தி கூறினார்.