ஓமன்: எண்ணெய் கப்பல் விபத்தில் சிக்கிய 8 இந்தியர்கள் மீட்பு; தொடருகிறது மீட்பு பணி
|ஓமனில் எண்ணெய் கப்பல் விபத்தில் சிக்கிய நபர்களை தேடும் மற்றும் மீட்கும் பணியில் இந்திய கடற்படையை சேர்ந்த போர்க்கப்பல் ஐ.என்.எஸ். தேக் ஈடுபட்டு உள்ளது.
ஏடன்,
ஓமன் நாட்டின் கடலோர பகுதியில் துகம் என்ற துறைமுக நகர் உள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு சுரங்க தொழில்கள் நடைபெற்று வரும் இந்த நகரருகே ராஸ் மத்ரகா என்ற இடத்தில் இருந்து தென்கிழக்கே 25 கடல் மைல்கள் தொலைவில் எண்ணெய் கப்பல் ஒன்று சில நாட்களுக்கு முன் திடீரென கவிழ்ந்தது.
இந்த கப்பலில் 13 இந்தியர்கள் உள்பட 16 பேர் பயணித்து உள்ளனர். மற்ற 3 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள் ஆவர் என ஓமனின் கடல்வழி பாதுகாப்பு மையம் தெரிவிக்கின்றது.
கப்பல் ஏமன் நாட்டின் துறைமுக நகரான ஏடன் நோக்கி சென்று கொண்டு இருந்தது. பிரெஸ்டீஜ் பால்கன் என்ற பெயரிடப்பட்ட கோமரோஸ் நாட்டின் கொடியுடன் கூடிய அந்த எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததில், காணாமல் போனவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணியில், இந்திய கடற்படையை சேர்ந்த போர்க்கப்பல் ஐ.என்.எஸ். தேக் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளது. கப்பல் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இதுவரை 8 இந்தியர்கள் மற்றும் இலங்கையை சேர்ந்த ஒருவர் மீட்கப்பட்டு உள்ளனர். மற்றவர்களை தேடும் பணி இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.