ஒடிசாவில் கொடிய ரெயில் விபத்து; போப் பிரான்சிஸ் இரங்கல்
|ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்த நபர்களுக்கு போப் பிரான்சிஸ் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
வாடிகன் நகரம்,
ஒடிசாவில் ஏற்பட்ட ரெயில் விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் பெங்களூரு, சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கின. இந்த கோர விபத்தில் சிக்கி 275 பயணிகள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர்.
ரெயில் விபத்தில் மீட்பு பணிகள் முடிந்து, மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்த நபர்களுக்கு போப் பிரான்சிஸ் தனது இரங்கலை தெரிவித்து உள்ளார்.
அவர் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில், இந்தியாவில் 2 நாட்களுக்கு முன்பு (ஜூன் 2) ஏற்பட்ட ரெயில் விபத்தில் பாதிப்படைந்தவர்களுக்காக நான் பிரார்த்தித்து கொள்கிறேன்.
ரெயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது அன்பை வெளிப்படுத்துகிறேன்.
உயிரிழந்தவர்களின் ஆன்மாக்களை சொர்க்கத்தில் இருக்கும் இறைவன் தனது ராஜ்ஜியத்திற்குள் சேர்க்கட்டும் என அவர் தெரிவித்து உள்ளார்.