உக்ரைனின் ஒடேசா துறைமுகம் மீது ரஷியா தாக்குதல்
|உக்ரைனின் முக்கிய துறைமுகமான ஒடேசா மீது ரஷியா சரமாரி தாக்குதல் நடத்தியது. இதில் 25 டிரோன்களை உக்ரைன் ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்.
கீவ்,
உக்ரைனும், ரஷியாவும் கோதுமை, பார்லி, சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதனால் அந்த பொருட்களை அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தனர். எனவே இந்த இரு நாடுகளையே மற்ற நாடுகள் சார்ந்திருக்கும் சூழல் உள்ளது.
இந்தநிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன்-ரஷியா இடையே போர் தொடங்கியது. இதனால் உணவு தானியங்களின் ஏற்றுமதி தடைபட்டதால் இவற்றை நம்பி இருந்த நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.
கருங்கடல் ஒப்பந்தம்
இதனை சமாளிக்க துருக்கியும், ஐ.நா.வும் பேச்சுவார்த்தை நடத்தி கருங்கடல் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி உக்ரைன் நாட்டின் துறைமுகங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு உணவு தானியங்கள் கொண்டு செல்லப்படும் கப்பல்கள் மீது ரஷியா தாக்குதல் நடத்தக்கூடாது என கூறப்பட்டது.
அதேசமயம் ரஷியாவும் உணவுப்பொருட்கள் மற்றும் உரங்களை ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதன் மூலம் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுக்கு உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
ஐ.நா. கண்டனம்
ஆனால் தங்களது உணவுப்பொருட்களை கப்பலில் அனுப்புவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. எனவே தங்களது கோரிக்கை ஏற்கப்படும் வரை இந்த கருங்கடல் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ரஷியா திடீரென அறிவித்தது.
இதனால் ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு அபாயம் ஏற்படும் என ஐ.நா. மற்றும் உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
துறைமுகம் மீது தாக்குதல்
இந்த நிலையில் உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான ஒடேசா மீது குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரைனின் சில குடியிருப்பு பகுதிகளும் சேதம் அடைந்தது.
எனினும் இந்த தாக்குதலில் 25 டிரோன்கள் மற்றும் 6 கப்பல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.