ஈராக்கில் பிரமாண்ட மின்னணு திரையில் ஓடிய ஆபாச படம்... பொதுமக்கள் அதிர்ச்சி
|பாக்தாத்தில் உள்ள பிரமாண்ட மின்னணு விளம்பர பலகையில் ஆபாச படம் சில நிமிடங்கள் வரை ஒளிபரப்பாகியுள்ளது.
பாக்தாத்,
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈராக், கலாச்சார ரீதியாக கடுமையான சட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் கொண்ட நாடாக விளங்குகிறது. அங்கு ஆபாச இணையதளங்களுக்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் ஈராக்கில் முழுமையாக அவற்றை தடை செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான விளம்பர பலகை ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென ஆபாச படம் ஒளிபரப்பானது. இதனை அப்பகுதியில் சென்று கொண்டிருந்த மக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பாக்தாத் நகரின் மைய பகுதியான உக்பா இப்ன் நஃபியா சதுக்கத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு பிரமாண்ட மின்னணு விளம்பர பலகையில் இந்த ஆபாச படம் சில நிமிடங்கள் வரை ஒளிபரப்பாகியுள்ளது. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அந்த மின்னணு பலகைக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பின்னர் இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்ட மின்னணு திரையை நிர்வகிக்கும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர், சம்பள பிரச்சினையால் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது மேலதிகாரியை பழிவாங்கும் நோக்கில் விளம்பர பலகையில் ஆபாச படம் ஓடுமாறு செய்தது தெரியவந்தது.
இதையடுத்து கரார் ஹூசைன் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாக்தாத் நகரில் மின்னணு விளம்பர பலகைகள் அனைத்திலும் விளம்பரங்கள் ஒளிபரப்பு செய்யப்படுவதை ஈராக் உள்துறை அமைச்சகம் தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.