< Back
உலக செய்திகள்
ரஷிய கச்சா எண்ணெய் மறுவிற்பனை; இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கக்கோரிய ஐரோப்பிய யூனியன் - ஜெய்சங்கர் மிரட்டல் பதிலடி
உலக செய்திகள்

ரஷிய கச்சா எண்ணெய் மறுவிற்பனை; இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கக்கோரிய ஐரோப்பிய யூனியன் - ஜெய்சங்கர் மிரட்டல் பதிலடி

தினத்தந்தி
|
17 May 2023 7:16 PM IST

இந்தியா மறுவிற்பனை செய்யும் கச்சா எண்ணெய்க்கு தடைகள் விதிக்க வேண்டுமென ஐரோப்பிய யூனியன் வெளியுறவுத்துறை மந்திரி கூறினார்.

பிரஷல்ஸ்,

ரஷியா - உக்ரைன் போர் ஓராண்டை கடந்து நீடித்து வரும் நிலையில் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. மேலும், ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகள் விதித்துள்ளன. ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதியையும் பெருமளவு குறைத்துள்ளன.

அதேவேளை, ரஷியாவிடமிருந்து இந்தியா தள்ளுபடி விலையில் அதிக அளவு கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. அவ்வாறு ரஷியாவிடமிருந்து கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெயை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சுத்திகரித்து அதை ஐரோப்பிய நாடுகளுக்கு மறுவிற்பனை செய்து வருகின்றன.

இதனிடையே, ஐரோப்பிய யூனியன் அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரி ஜோசம் பெரில் நேற்று தனியார் செய்தி நிறுவனத்திற்கு போட்டி அளித்தார். அப்போது, ரஷியாவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய், எரிவாயு இந்தியா வழியாக ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு வந்தால் அது பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும். ஐரோப்பிய யூனியன் நாடுகள் இது தொடர்பாக தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்' என்றார்.

ரஷிய எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்தால் அதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், இந்தியா ரஷிய கச்சா எண்ணெயை கொள்முதல் செய்து அதை சுத்திகரித்து மீண்டும் நமக்கு மறுவிற்பனை செய்தால் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா மறுவிற்பனை செய்யும் கச்சா எண்ணெய்க்கு ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும்' என்று கூறினார்.

இந்நிலையில், பெல்ஜியம் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரிடம் ரஷிய கச்சா எண்ணெய் மறுவிற்பனை தொடர்பாக இந்தியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத்துறை மந்திரி கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், உங்கள் கேள்வியில் எந்த அடிப்படையும் இல்லை என நான் நினைக்கிறேன். என்னை பொருத்தவரை ரஷிய கச்சா எண்ணெய் பெருமளவு மூன்றாம் நாட்டிற்கு மாற்றப்பட்டால் அது ரஷிய கச்சா எண்ணெய்யாக கருத்தப்படாது என்று ஐரோப்பிய யூனியனின் விதிகள் கூறுகின்றன. ஐரோப்பிய யூனியனின் விதி எண் 833/2014-ஐ பார்க்கும்படி உங்களை கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.



மேலும் செய்திகள்