< Back
உலக செய்திகள்
சந்திரயான்-3 வெற்றி: நாங்கள் இருப்பதே நிலவில் தான்.. பாகிஸ்தானியர்கள் வேதனை- வைரலாகும் வீடியோ
உலக செய்திகள்

சந்திரயான்-3 வெற்றி: நாங்கள் இருப்பதே நிலவில் தான்.. பாகிஸ்தானியர்கள் வேதனை- வைரலாகும் வீடியோ

தினத்தந்தி
|
25 Aug 2023 8:37 AM GMT

பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியாவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், பாகிஸ்தான் மக்கள் சந்திரயானை ஏவிய இந்தியாவை புகழ்ந்தும் தங்கள் நாட்டு அரசை விமர்சித்தும் பேசி உள்ளனர்.

இஸ்லாமாபாத்,

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் தடம் பதித்து இமாலய சாதனை படைத்தது குறித்து உலகெங்கிலும் உள்ள இந்திய வம்சாவளியினர் பெருமிதம் மற்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானும் நம் நாட்டின் சாதனையை பாராட்டியுள்ளது. சந்திரயான்-3 திட்டம் அண்டை நாட்டில் உள்ள சாமானியர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை, இந்தியாவின் இந்த சாதனையை பாராட்டியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, அவர்கள் தரப்பிலிருந்து அதைப் பற்றி சொல்லப்படும் வேடிக்கையான விஷயங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர் இந்தியாவின் மிஷன் மூன் குறித்து தனது நாட்டு மக்களிடம் கருத்து கேட்டு அந்த வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

இந்த சுவாரஸ்யமான வீடியோவில், மக்களிடம் கருத்து கேட்டபோது ஒருவர், 'பணத்தை முதலீடு செய்து இந்தியா நிலவிற்குச் சென்றுள்ளது, ஆனால் நாங்கள் ஏற்கெனவே நிலவில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எப்படி நிலவில் மின்சாரமும் தண்ணீரும் இல்லையோ அப்படிதான் நாங்கள் இங்கு வாழ்கிறோம்' எனக் கூறினார்.

இதுமட்டுமின்றி, மற்றொருவர், சந்திரயான் 3-ன் நேரடி ஒளிபரப்பை குழந்தைகளுக்குக் காட்ட வேண்டும், அதனால் அவர்கள் இந்தியாவிடம் இருந்து விஞ்ஞானத்தைக் கற்றுக்கொள்ள முடியும் என்று கூறினார். தொழில்நுட்பத்தில் இந்தியா தங்களது நாட்டை விட முன்னேறிவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இது தவிர, பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியாவின் வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. அதில், பாகிஸ்தான் மக்கள் சந்திரயான் விண்கலத்தை ஏவிய இந்தியாவைப் புகழ்ந்தும் தங்கள் நாட்டு அரசை விமர்சித்தும் பேசியுள்ளனர்.

அதில், இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த ஒருவர், இந்திய நாட்டின் விண்கலம் நிலவில் மட்டுமல்ல, செவ்வாய் கிரகத்திலும் தரையிறங்கலாம் என பாராட்டியுள்ளார்.

மேலும், இதிலிருந்து பாகிஸ்தான் மக்கள் கற்றுக்கொண்டது, கடந்த 77 ஆண்டுகளில், இந்தியா பல சாதனைகளை புரிந்துவிட்டது; ஆனால், இந்தியாவுடன் பகையை மட்டுமே பாகிஸ்தான் காப்பாற்றி வருகிறது. ஆகவே இந்த அரசு இந்தியாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது, என மக்கள் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்