பாப் பாடலை கேட்டு ரசித்த சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடும் தண்டனை விதித்த வடகொரிய அரசு
|16 வயதே நிரம்பிய இரண்டு சிறுவர்கள் தென் கொரிய பாப் இசை, சினிமாவைக் கண்டு ரசித்ததற்காக தண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பியாங்யாங்,
தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்த குற்றத்துக்காக தங்கள் நாட்டைச் சேர்ந்த 2 சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடுமையான வேலை செய்யும் தண்டனையை வட கொரிய அரசு விதித்திருப்பது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
16 வயதே நிரம்பிய இரண்டு சிறுவர்கள் தென் கொரிய பாப் இசை, சினிமாவைக் கண்டு ரசித்ததற்காக தண்டிக்கப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட கொரியா பல ஆண்டுகளாகவே தென் கொரியாவுடன் எந்த விதத்தில் தொடர்பு ஏற்படுத்தினாலும் சொந்த மக்களை தண்டிக்கும் போக்கைக் கையாண்டு வருகின்றது. கடந்த 2020 -ம் ஆண்டு இதற்காக பிரத்யேக சட்டத்தைக் கொண்டுவந்தது. தென் கொரிய பொழுதுபோக்கு அம்சங்களை ரசிப்பதை தடை செய்யும் சட்டம் அது. அந்தச் சட்டத்தின்படியே அந்த இரண்டு சிறுவர்களுக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தென் கொரிய பொழுதுபோக்கை பார்க்கும் வடகொரியர்களுக்கு இதுபோன்ற தண்டனைகளை வடகொரிய அரசு வழங்குவது இது முதல் முறையல்ல.