தென்கொரியாவுக்கு எதிராக போர்: தயார் நிலையில் இருக்க கிம் ஜாங் அன் உத்தரவு
|வடகொரியா, ஜப்பான் மற்றும் தென்கொரிய கடற்பகுதியில் ஏவுகணை சோதனை நடத்தி பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது.
பியாங்க்யாங்,
கொரிய தீபகற்ப பகுதியில் வடகொரியா தொடர் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை நடத்துகின்றது. எனவே நீண்ட தூர ஏவுகணை சோதனை நடத்த வடகொரியாவுக்கு ஐ.நா. தடை விதித்துள்ளது.
ஆனால் அதனை பொருட்படுத்தாத வடகொரியா ஜப்பான் மற்றும் தென்கொரிய கடற்பகுதியில் ஏவுகணை சோதனை நடத்தி பதற்றத்தை ஏற்படுத்துகின்றது.
எனவே தங்களது பாதுகாப்பு கருதி தென்கொரியாவும், ஜப்பானும் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன. இது தங்களுக்கு எதிரான போர் ஒத்திகை என கருதும் வடகொரியா இதனை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. மேலும் தங்கள் மீது தாக்குதல் நடத்தினால் எதிரி நாடுகள் முற்றிலும் அழிக்கப்படும் என வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் எச்சரிக்கை விடுத்தார். அதனை பொருட்படுத்தாத அந்த நாடுகள் மீண்டும் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இது வடகொரியாவுக்கு ஆத்திரத்தை கிளப்பியது.
இதனால் நேற்று மீண்டும் தென்கொரியா கடற்பகுதியில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது. இந்த பதற்றத்துக்கு இடையே கிம் ஜாங் அன் நம்போவில் உள்ள கப்பல் கட்டும் தளத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்குள்ள ராணுவ வீரர்களிடையே அவர் பேசும்போது, நாட்டின் கடல்சார் இறையாண்மையை பாதுகாப்பதிலும், போர் தயாரிப்புகளை முடுக்கி விடுவதிலும் கடற்படை முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே போருக்கான ஏற்பாடுகளை முடுக்கி விடுமாறு ராணுவத்துக்கு அழைப்பு விடுத்தார். இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் மீண்டும் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது.