வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
|வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது.
சியோல்,
உலக நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது. இந்த நிலையில், வடகொரியா கிழக்கு கடற்கரையில் இருந்து 2 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை கடலில் செலுத்தி சோதனை நடத்தியிருப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜப்பான் பாதுகாப்பு மந்திரி யாசுகாசு யமடா கூறுகையில், "நேற்று அதிகாலை 3½ மணி அளவில் வடகொரியா ராணுவம் 2 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை பியாங்காங்கில் இருந்து சோதித்தது. அவை 550 கி.மீ தூரம் தள்ளி கொரிய தீபகற்ப கடலில் விழுந்தது. மேலும் அவை அணு ஆயுதங்கள் தாக்கி செல்லும் வல்லைமை படைத்தவை என கருதப்படுகிறது" என்றார்.
அமெரிக்க படைகளுடன் இணைந்து தென் கொரியா போர் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. மேலும் தென் கொரியாவுக்கு ஆதரவாக அணு ஆயுதம் தாங்கிய போர் கப்பல் ஒன்றை தென்கொரிய துறைமுக நகரமான புசானில் அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.