< Back
உலக செய்திகள்
பலூன் மூலம் தென்கொரியாவிற்குள் மீண்டும் குப்பைகளை வீசிய வடகொரியா
உலக செய்திகள்

பலூன் மூலம் தென்கொரியாவிற்குள் மீண்டும் குப்பைகளை வீசிய வடகொரியா

தினத்தந்தி
|
2 Jun 2024 7:43 AM GMT

பலூன் மூலம் தென்கொரியாவிற்குள் வடகொரியா மீண்டும் குப்பைகளை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சியோல்,

அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா.

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா - தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. மேலும், தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரித்து வருகிறது.

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் பலூன் மூலம் தென்கொரியாவிற்குள் வடகொரியா குப்பைகளை வீசியது. சிகிரெட் துண்டுகள், வெற்று காகிதங்கள், கிழிந்த துணிகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்ற குப்பைகள் அடங்கிய பலூன்களை தென்கொரியாவிற்குள் வடகொரியா பறக்கவிட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தென்கொரியாவிற்குள் மீண்டும் குப்பை பலூனை வடகொரியா அனுப்பியுள்ளது. கடந்த நேற்று இரவு முதல் இன்று காலை வரை தென்கொரியாவிற்குள் 600க்கும் மேற்பட்ட குப்பை பலூன்களை வடகொரியா அனுப்பியுள்ளது. வடகொரியாவிற்கு எதிரான வாசகங்களுடன் தென்கொரியாவில் இருந்து வீசப்பட்ட காகிதங்களுக்கு பதிலடியாக இந்த பலூன்கள் வீசப்பட்டதாக வடகொரியா தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தால் கொரிய தீபகற்பத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்