வடகொரியா மீண்டும் கடலுக்கு அடியில் அணு ஆயுத சோதனை
|வடகொரியா மீண்டும் கடலுக்கு அடியில் அணு ஆயுத சோதனையை நடத்தியுள்ளது.
வடகொரியா தொடர்ச்சியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை சோதித்து கொரிய தீபகற்பத்தை பதற்றத்தில் வைத்துள்ளது. மேலும் வடகொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடும் அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும் வடகொரியா மிரட்டி வருகிறது.
இந்த சூழலில் கடந்த மாத இறுதியில் செயற்கையாக சுனாமியை ஏற்படுத்தும் 'ஹெய்ல்-1' என்ற புதிய அணு ஆயுத்தை கடலுக்கு அடியில் வடகொரியா சோதித்தது. இதற்கு உலக நாடுகளிடம் கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில் வடகொரியா மீண்டும் கடலுக்கு அடியில் அணு ஆயுத சோதனையை நடத்தியுள்ளது.
இது குறித்து வடகொரியா அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், "நாட்டின் கிழக்கு கடற்கரையில் இருந்து செலுத்தப்பட்ட 'ஹெய்ல்-2' அணு ஆயுதம் 71 மணி நேரத்துக்கும் மேலாக நீருக்கடியில் பயணித்து துறைமுக நகரமான டான்சோன் அருகே நிறுத்தப்பட்டிருந்த மாதிரி போர்க்கப்பலை வெற்றிகரமாக தாக்கி அழித்தது. சமீபத்திய இந்த சோதனை 'ஹெய்ல்-2' அணு ஆயுதம் 1,000 கி.மீ. வரை சென்று தாக்கும் திறன் கொண்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது" என கூறப்பட்டுள்ளது.
வடகொரியாவின் இந்த அடாவடி போக்கால் கொரிய தீபகற்பத்தில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.