2024-ம் ஆண்டு மேலும் 3 ராணுவ உளவு செயற்கைகோளை அனுப்ப வடகொரியா திட்டம்
|எதிரி நாடுகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ராணுவத்தை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று கிம் ஜாங் அன் வலியுறுத்தினார்.
பியாங்க்யாங்,
கொரிய தீபகற்ப பகுதியில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகள் மூலம் வடகொரியா தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்துகின்றது. எனவே நீண்ட தூர ஏவுகணைகளை அனுப்ப வடகொரியாவுக்கு ஐ.நா. தடை விதித்துள்ளது. ஆனால் அதனை பொருட்படுத்தாத வடகொரியா கடந்த ஆண்டில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை நடத்தியது.
எனவே வடகொரியாவை சமாளிக்க தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியை நடத்துகின்றன. இதனை தங்களுக்கு எதிரான போர் ஒத்திகை என வடகொரியா கருதுகிறது. இதனால் தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் ராணுவ நகர்வுகளை கண்காணிக்க உளவு செயற்கைகோள்களை வடகொரியா அனுப்பியது. இதற்கு ஐ.நா. மற்றும் உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன.
இந்தநிலையில் 2024-ம் ஆண்டு மேலும் 3 ராணுவ உளவு செயற்கைகோளை அனுப்ப திட்டமிட்டு இருப்பதாக வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் கூறினார். அப்போது எதிரி நாடுகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ராணுவத்தை தயாராக வைத்திருக்கவும் அவர் வலியுறுத்தினார்.