ஐ.நா.வின் தடையை மீறி ராணுவ உளவு செயற்கைகோள்களை அனுப்பும் வடகொரியா
|ஐ.நா.வின் தடையை மீறி ராணுவ உளவு செயற்கைகோள்களை வடகொரியா அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பியாங்யாங்,
கொரிய தீபகற்பத்தில் தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை, அணு ஆயுத சோதனை என வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி உள்ளது. இது தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளின் கடற்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. எனவே நீண்ட தூர ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்த வடகொரியாவுக்கு ஐ.நா. தடை விதித்துள்ளது.
இந்தநிலையில் ஜப்பான் அரசாங்கத்துக்கு வடகொரியா நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளது. அதில் ராணுவ உளவு முயற்சியின் ஒருபகுதியாக முதன் முறையாக செயற்கைக்கோள் ஒன்றை ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனுப்ப உள்ளதாக வடகொரிய அரசாங்கம் கூறியது.
ஐ.நா.வின் தடையை மீறி ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தங்களது நாட்டுக்கு மிகுந்த அச்சுறுத்தல் என ஜப்பான் தெரிவித்துள்ளது. எனவே தங்களது நாட்டின் எல்லைக்குள் இந்த செயற்கைகோள் அல்லது விண்வெளி குப்பைகள் நுழைந்தால் அதனை சுட்டு வீழ்த்துமாறு ஜப்பான் பாதுகாப்பு மந்திரி யசுகாசு ராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளார்.