< Back
உலக செய்திகள்
வடகொரியா 7-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்த வாய்ப்பு - அமெரிக்கா எச்சரிக்கை
உலக செய்திகள்

வடகொரியா 7-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்த வாய்ப்பு - அமெரிக்கா எச்சரிக்கை

தினத்தந்தி
|
14 March 2023 6:31 AM IST

அணுகுண்டு சோதனைக்கான இறுதிகட்ட பணிகளை வடகொரியா மேற்கொண்டு வருவதாக நெட் பிரைஸ் தெரிவித்தார்.

வாஷிங்டன்,

வடகொரியா உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை நடத்தி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு மிரட்டல் விடுத்து வருகிறது.

அண்மையில் வடகொரியாவின் கிழக்கு கடற்கரை நகரமான சின்போவில் இருந்து நீர் மூழ்கி கப்பல் மூலம் 2 ஏவுகணைகள் வீசப்பட்டதாக அந்நாட்டின் மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த சோதனையின் போது சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது தொடர்பாக எந்த தகவலும் இல்லை.

வடகொரியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் கடந்த 5 ஆண்டுகளாக தென்கொரியாவும், அமெரிக்க ராணுவ கூட்டுப் படையினரும் இணைந்து பயிற்சி எடுத்து வருகின்றனர். மேலும் வடகொரியா மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தென்கொரியா மற்றும அமெரிக்க அரசுகள் சந்தேகித்து வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் செய்தியாளர்களிடம் பேசிய போது, வடகொரியா 7-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்த வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கான இறுதிகட்ட பணிகளை வடகொரியா மேற்கொண்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

வடகொரியா 7-வது அணுகுண்டு சோதனையை நடத்தினால், அந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும் என்று நெட் பிரைஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்