< Back
உலக செய்திகள்
அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த நிலையில் ஏவுகணை சோதனை நிகழ்த்திய வட கொரியா
உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த நிலையில் ஏவுகணை சோதனை நிகழ்த்திய வட கொரியா

தினத்தந்தி
|
12 July 2023 9:50 PM IST

அத்துமீறி நுழையும் அமெரிக்க உளவு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படும் என்று வட கொரியா எச்சரித்தது.

பியாங்யாங்,

அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. அமெரிக்காவின் எச்சரிக்கைகளை மீறி வட கொரியா தொடர் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அண்மையில் தங்களது வான்வெளிக்குள் அமெரிக்க உளவு விமானம் அத்துமீறி நுழைந்ததாக வடகொரியா குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங், "அமெரிக்க ராணுவம் அதன் கடல்சார் ராணுவ எல்லைக் கோட்டை தாண்டினால் தீர்மானமான நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் அமெரிக்க உளவு விமானம் ஊடுருவினால் கடும் விளைவை சந்திக்கும்" என்று எச்சரித்தார். மேலும் வட கொரிய வான் எல்லையில் அத்துமீறி நுழையும் அமெரிக்க உளவு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படும் என்றும் வட கொரியா எச்சரித்தது.

இந்த நிலையில் வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியது. வட கொரியாவின் கிழக்கு கடல் பகுதியில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை நடத்தப்பட்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை, ஜப்பான் கடல் பரப்பில் விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கொரியா தீப கற்பத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்