ஐ.நா. பொதுச்செயலாளர் அமெரிக்காவின் கைப்பாவை - வடகொரியா சாடல்
|ஐ.நா. பொதுச்செயலாளர் அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்படுவதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
பியாங்யாங்,
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமலும் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
அந்த வகையில் கடந்த 18-ந் தேதி, அமெரிக்கா வரை சென்று தாக்கும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா சோதித்தது. இந்த ஏவுகணை ஜப்பான் கடலில் விழுந்தது. வடகொரியாவின் இந்த சோதனையை அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் வன்மையாக கண்டித்தன. அதை தொடர்ந்து ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெசும் வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அவர் தனது அறிக்கையில் எந்தவொரு ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை எடுப்பதை வடகொரியா உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் ஐ.நா. பொதுச்செயலாளரின் இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக வடகொரிய வெளியுறவு மந்திரி சோ சோன் ஹுய், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-
ஐ.நா. சாசனத்தின் நோக்கம், கோட்பாடுகள் மற்றும் அனைத்து விஷயங்களிலும் பாரபட்சமற்ற தன்மை, சமத்துவம் ஆகியவற்றை பேணுவதற்கான தனது சரியான பணியை மறந்து, மிகவும் இழிவான அணுகுமுறையை ஐ.நா பொதுச்செயலாளர் எடுத்ததற்கு எனது கடும் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு எடுத்துச் செல்லும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை ஆண்டனியோ குட்டரெஸ் கவனிக்காதது, அவர் அமெரிக்காவின் கைப்பாவை என்பதை தெளிவாக நிரூபிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.