ரஷியாவுக்கு வடகொரியா ஆயுத வினியோகம்; புகைப்பட ஆவணங்களுடன் அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு
|உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷியாவுக்கு வடகொரியா ஆயுத வினியோகம் செய்துள்ளது என அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளது.
வாஷிங்டன்,
உக்ரைனுக்கு எதிராக ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் போர் தொடுத்தது. ஒன்றரை ஆண்டுகளுக்கும் கூடுதலாக போரானது நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. போரை நிறுத்த ஐ.நா. போன்ற அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தின.
இதில், போரை முடிவுக்கு கொண்டு வரும் யுக்தியாக, ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. எனினும், போரானது முடிவுக்கு வராமல் உள்ளது. இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் கடந்த மாத தொடக்கத்தில் ரஷியாவுக்கு பயணம் செய்தது பரபரப்பாக பார்க்கப்பட்டது.
கொரோனா பெருந்தொற்றின்போது, ரஷியாவை ஒட்டியுள்ள வடகொரியாவின் எல்லைகள் மூடப்பட்டன. பெருந்தொற்று பரவலுக்கு பின்னர், முதன்முறையாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது, அனைத்து கெட்ட சக்திகளையும் தண்டித்து, போரில் ரஷியா வெற்றி பெறும் என்று புதினிடம் கிம் ஜாங் அன் கூறினார்.
இதனால், இரு நாடுகளுக்கும் இடையே, ஆயுத ஒப்பந்தங்கள் நடைபெற்று இருக்க கூடும் என சந்தேகம் எழுந்தது. இதனை தொடர்ந்து அமெரிக்காவும் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
வடகொரியா மற்றும் ரஷியா இடையேயான ஆயுத விற்பனைக்கு எதிராக நாங்கள் முன்பே தடைகளை விதித்து இருக்கிறோம். தேவைப்பட்டால், கூடுதல் தடைகளை விதிக்கவும் நாங்கள் தயங்கமாட்டோம் என தெரிவித்தது.
இந்த நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷியாவுக்கு வடகொரியா ஆயுத வினியோகம் செய்துள்ளது என அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளது.
இதுபற்றி அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பை கூறும்போது, சமீபத்திய வாரங்களில் ரஷியாவுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டெய்னர்களில் ராணுவ தளவாடங்கள் மற்றும் வெடிபொருட்களை வடகொரியா வழங்கியுள்ளது என்பதற்கான தகவல் அமெரிக்காவிடம் உள்ளது என பேசியுள்ளார்.
ரஷியாவிடம் ஆயுதங்களை கொண்டு சென்று வடகொரியா ஒப்படைத்தது, கடந்த மாதம் 7-ந்தேதி மற்றும் கடந்த 1-ந்தேதிக்கு இடையே நடந்து உள்ளது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதுபற்றிய செயற்கைக்கோள் புகைப்படங்களையும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிகாரிகள் வெளியிட்டு உள்ளனர்.
இந்த ஆயுத வினியோகம், உக்ரைனிய நகரங்களை தாக்க பயன்படுவதுடன், உக்ரைனிய பொதுமக்களை கொல்லவும் பயன்படும். அதனுடன் ரஷியாவின் சட்டவிரோத போர் தொடரும் என்று கிர்பை கூறியுள்ளார்.