ஹிஜாப்பை அகற்ற பெண்களை ஊக்குவிப்பவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்குப்பதிவு - வெளியான பரபரப்பு உத்தரவு
|ஹிஜாப்பை அகற்ற பெண்களை ஊக்குவிக்கும் நபர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்கு பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெஹ்ரான்,
ஈரான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிவது தொடர்பாக கடுமையான சட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அந்நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கூறி மாஷா அமினி (வயது 22) என்ற இளம்பெண்ணை போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஈரான் அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது. வன்முறையை தூண்டியதாக சிலருக்கு மரண தண்டனையும் நிறைவேற்றப்பட்டது.
சமீபத்தில் ஹிஜாப் அணியாமல் கடைக்கு வந்த தாய், மகள் மீது ஒரு நபர் தயிரை ஊற்றிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து பெண்கள் 'ஹிஜாப்' அணிவதைக் கண்காணிக்க, பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் மீறுபவர்களிடம் அதிகாரிகள் அபராதம் வசூலித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது ஹிஜாப்பை அகற்ற பெண்களை ஊக்குவிக்கும் நபர்கள் மீது வழக்கு தொடரப்படும் என ஈரானின் துணை அட்டர்னி ஜெனரல் எச்சரித்துள்ளார். மால்கள், உணவகங்கள், கடைகள், தெருக்கள் மற்றும் பிற பொது இடங்களில் ஹிஜாப் இன்றி வெளியே வரும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பெண் பிரபலங்கள் பலரும் ஹிஜாப் இன்றி இணையத்தில் தங்கள் புகைப்படங்களைப் பதிவேற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் ஹிஜாப் அணியாததை ஊக்குவிப்பவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்கு பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.