ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவதற்கு முன் தேர்தலை நடத்தும் திட்டம் இல்லை: ஜப்பான் பிரதமர் உறுதி
|ஜப்பானில் ஆளுங்கட்சியினர் நிதி சேகரிப்பு நிகழ்ச்சி மூலம் பெற்ற வருவாயை ஊழல் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
டோக்கியோ,
ஜப்பானில் பிரதமர் புமியோ கிஷிடா தலைமையிலான லிபரல் டெமாக்ரடிக் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே பிரிவை சேர்ந்தவர்கள் நிதி சேகரிப்பு நிகழ்ச்சி மூலம் பெற்ற வருவாயை ஊழல் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து பிரதமர் புமியோ கிஷிடா விலகினார். மேலும் முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த விவகாரம் ஆளுங்கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
அங்கு தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2025) அக்டோபர் வரை உள்ளது. ஆனால் நாடாளுமன்றத்தை திடீரென கலைத்து தேர்தலை நடத்த பிரதமருக்கு அதிகாரம் உள்ளது. எனினும் கட்சி நிதி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் முழுமையாக தண்டிக்கப்படும்வரை தேர்தல் நடத்தும் திட்டமில்லை. எனவே அவர்கள் அனைவரும் கூடிய விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் புமியோ கிஷிடா சூளுரைத்தார். இது ஜப்பான் அரசியலில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.