< Back
உலக செய்திகள்
ஹமாஸ் அமைப்பை அழிக்கும் வரை போர் நிறுத்தம் கிடையாது - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
உலக செய்திகள்

ஹமாஸ் அமைப்பை அழிக்கும் வரை போர் நிறுத்தம் கிடையாது - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

தினத்தந்தி
|
26 Dec 2023 3:33 PM IST

காசாவில் போர் நிறுத்தத்தைக் கொண்டு வர சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஜெருசலேம்,

இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7-ந்தேதி காசா முனையில் செயல்படும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் பயங்கரவாத தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து காசாமுனையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, காசாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100-க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. ஆனாலும், இன்னும் 129 பேர் காசாவில் பணய கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.

இதனிடையே கிறிஸ்துமஸ் தினத்தின்போது காசாவில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதலில் பல குடும்பங்கள் கொல்லப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. காசாவில் உடனடியாக போர் நிறுத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பை அழிக்கும் வரை போர் நிறுத்தம் கிடையாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "ஹமாஸ் அமைப்பு அழிக்கப்பட வேண்டும். காசாவில் உள்ள ஆயுதக்குழுக்களை அழிக்க வேண்டும். பாலஸ்தீன சமூகத்தில் பயங்கரவாதம் ஒடுக்கப்பட வேண்டும். இந்த மூன்றும் நிறைவேறும் வரை காசாவில் போர் நிறுத்தம் கிடையாது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்