< Back
உலக செய்திகள்
நீரவ் மோடி நாடு கடத்தப்படுவதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

கோப்புப்படம்

உலக செய்திகள்

நீரவ் மோடி நாடு கடத்தப்படுவதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

தினத்தந்தி
|
9 Nov 2022 6:01 PM IST

நீரவ் மோடி நாடு கடத்தப்படுவதற்கு எதிராக செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை லண்டன் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். சி.பி.ஐ. அளித்த புகாரின் பேரில் அங்கு கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகளாக லண்டன் வேண்ட்ஸ்வெர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் முயற்சியில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை லண்டன் ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அதில் நிரவ் மோடி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய அபாயம் குறித்து விசாரிக்கப்பட்டது. அப்போது, சிறையில் நிரவ் மோடியிடம் நேரடியாக ஆய்வு செய்த 2 உளவியல் நிபுணர்கள், அவர் மனஅழுத்தத்துடனும், தற்கொலை எண்ணத்துடனும் இருப்பதாக தெரிவித்தனர்.

அதேநேரம் இந்தியாவில் நிரவ் மோடிக்கான பாதுகாப்பு குறித்து, இந்திய அதிகாரிகள் சார்பில் ஆஜரான வக்கீல் உறுதியளித்தார். நிரவ் மோடி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவரது தனிப்பட்ட நலனை காப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என்று அவரது வக்கீல் வாதிட்டார்.

இந்நிலையில் நீரவ் மோடி நாடு கடத்தப்படுவதற்கு எதிராக செய்த மேல்முறையீட்டு மனுவை இங்கிலாந்து கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர் மனநிலை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் அபாயம் இருப்பதைக் காரணமாகக் காட்டி, இந்தியாவில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் பண மோசடி வழக்குகளையும் எதிர்கொள்வதிலிருந்து தப்பிப்பது நியாயமாகாது என்றும் லண்டன் ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

மேலும், கடந்த பிப்ரவரி மாதம் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று தீா்ப்பளித்திருந்தது சரியே என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து நீரவ் மோடி 14 நாட்களுக்குள் பிரிட்டன் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யலாம் என்று கூறப்படுகிறது. அதுவும் இந்த வழக்கு பொது முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதி அந்நாட்டு சுப்ரீம்கோர்ட்டு அனுமதி அளித்தால் மட்டும்தான் அவரால் மேல்முறையீடு செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்