நிரவ் மோடி மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தது இங்கிலாந்து கோர்ட்டு - விரைவில் நாடு கடத்தப்பட வாய்ப்பு
|இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து நிரவ் மோடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இங்கிலாந்து கோர்ட்டு நிராகரித்தது.
லண்டன்,
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். சி.பி.ஐ. அளித்த புகாரின் பேரில் அங்கு கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகளாக லண்டன் வேண்ட்ஸ்வெர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் முயற்சியில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை லண்டன் ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அதில் நீரவ் மோடி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய அபாயம் குறித்து விசாரிக்கப்பட்டது. அப்போது, சிறையில் நீரவ் மோடியிடம் நேரடியாக ஆய்வு செய்த 2 உளவியல் நிபுணர்கள், அவர் மனஅழுத்தத்துடனும், தற்கொலை எண்ணத்துடனும் இருப்பதாக தெரிவித்தனர்.
அதேநேரம் இந்தியாவில் நீரவ் மோடிக்கான பாதுகாப்பு குறித்து, இந்திய அதிகாரிகள் சார்பில் ஆஜரான வக்கீல் உறுதியளித்தார். நீரவ் மோடி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவரது தனிப்பட்ட நலனை காப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என்று அவரது வக்கீல் வாதிட்டார்.
இந்த விசாரணையின் போது, ஐகோர்ட் நீதிபதிகள் அவரது மேல்முறையீட்டில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் தேவையற்றவை என்று ஒப்புக்கொண்டனர். மருத்துவ சோதனைகளின் அடிப்படையில் அவரது மனநிலை நன்றாக இருப்பதையும், தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை என்பதையும் உறுதி செய்த நீதிமன்றம், அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப உத்தரவிட்டது.
அவரை இந்தியாவுக்கு அனுப்புவதால் நிரவ் தற்கொலை செய்துகொள்ளும் அபாயம் இல்லை. அவரை இந்தியாவுக்கு அனுப்புவது அநியாயம் என்று அவரது மேல்முறையீட்டில் கூறியிருந்த விஷயங்களையும் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.ஆகவே அவரை இந்தியாவுக்கு அனுப்பி சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது நல்லது என்று கூறி லண்டன் ஐகோர்ட்டில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து நீரவ் மோடி தன்னை நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 2 வார கால அவகாசம் கோரி, லண்டன் ஐகோர்ட்டில் நீரவ் மோடி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவானது லண்டனில் உள்ள ராயல் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து நிரவ் மோடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துள்ளது. அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள் நிரவ் மோடியின் மேல்முறையீடு கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டனர்.
இதன்மூலம், நீரவ் மோடிக்கு இருந்த அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, அவர் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.