நைஜீரியா: மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு; 25 பேர் பலி
|நைஜீரியாவின் ஓமலா பகுதியில், வருங்காலத்தில் வேறு தாக்குதல்கள் நடந்து விட கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலான படைகளை அரசு நிறுத்தியுள்ளது.
அபுஜா,
நைஜீரியாவின் வடக்கு மத்திய பகுதியில் அமைந்த கோகி மாகாணத்தில் ஓமலா பகுதியில் அகோஜிஜு-ஓடோ சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், ஆயுதமேந்திய மர்ம நபர்கள் திடீரென அந்த சமூக மக்கள் கூடியிருந்த பகுதிக்குள் புகுந்து அதிரடியாக எல்லோரையும் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 25 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து உள்ளனர்.
இதுபற்றி சமூக தலைவரான எலியாஸ் அடாபோர் கூறும்போது, சமீபத்தில் இந்த பகுதியில் தாக்குதல்கள் அதிகரித்து உள்ளன. இதில், குழந்தைகள் உள்பட பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அடுத்து வேறு எந்தவித தாக்குதல்களும் வருங்காலத்தில் நடந்து விட கூடாது என்பதற்காக, அந்த பகுதியில் கூடுதலான படைகளை அரசு நிறுத்தியுள்ளது.