< Back
உலக செய்திகள்
#லைவ் அப்டேட்ஸ்:  உக்ரைனுக்கு  ரூ.3 லட்சம் கோடி வழங்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் -   அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி
உலக செய்திகள்

#லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுக்கு ரூ.3 லட்சம் கோடி வழங்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் - அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி

தினத்தந்தி
|
20 May 2022 8:50 AM IST

உக்ரைன் மீதான ரஷிய போர், உலகளவில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:-


Live Updates

  • 20 May 2022 6:31 PM IST

    உக்ரைனுக்கு 19.8 பில்லியன் டாலர் நிதி உதவியை அளிக்க ஜி 7 நாடுகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. ரஷியாவின் தாக்குதலால், உக்ரைன் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலயில், அந்நாட்டுக்கு பொருளாதார ரீதியில் உதவும் வகையில் ஜி 7 நாடுகள் நிதி உதவியை அளிக்க உள்ளன. உக்ரைனின் நிதி சூழல், ரஷியாவுடனான போரில் எதிரொலித்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த நிதி அளிக்கப்படுவதாக ஜி 7 நாடுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • உக்ரைனுக்கு மீண்டும் ரூ.3 லட்சம் கோடி நிதியுதவி - அமெரிக்கா
    20 May 2022 3:25 PM IST

    உக்ரைனுக்கு மீண்டும் ரூ.3 லட்சம் கோடி நிதியுதவி - அமெரிக்கா

    உக்ரைனுக்கு மீண்டும் ரூ.3 லட்சம் கோடி நிதியுதவி வழங்க அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

    உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் 3 மாதங்களை எட்ட உள்ள நிலையிலும் ரஷியாவுக்கு உக்ரைனும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்தநிலையில் போரில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நிதி மற்றும் ராணுவ உதவியை அளித்து வருகின்றன.

    மேலும், ரஷியாவுக்கு எதிராகத் தொடர்ந்து போரிட உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கப்படும் என நேட்டோ அமைப்பு அறிவித்ததுடன் ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் வெற்றி பெற முடியும் என நேட்டோ அமைப்பு தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இந்தநிலையில், ரஷியாவின் பயங்கர தாக்குதலுக்கு கடும் சேதங்களைச் சந்தித்து வரும் உக்ரைனுக்கு நிதியுதவியாக 40 பில்லியன் டாலர்களை(ரூ.3.08 லட்சம் கோடி) அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

    கடந்த சில நாள்களுக்கு முன் 40 பில்லியன் டாலர் வழங்க ஒப்புதல் அளித்த நிலையில் மீண்டும் நிதியுதவி செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    உக்ரைனுக்கு நிதியுதவியாக 40 பில்லியன் டாலர்களை(ரூ.3.08 லட்சம் கோடி) அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்ததற்கு உகரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.

  • 20 May 2022 1:13 PM IST

    உக்ரைனின் செர்னோபில் அணுமின் நிலையம் அருகே பற்றி எரியும் காட்டு தீ..!

    உக்ரைனின் செர்னோபில் அணுமின் நிலையம் அருகே பற்றி எரிந்து வரும் காட்டுத்தீ, கதிர்வீச்சு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது.

    அணுமின் நிலைய சுற்றுவட்டார பகுதிகளில் கதிர்வீச்சின் அளவு குறிப்பிட்ட அளவை விட அதிகமாக இல்லை என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்ததாக ஐ.நா அணுசக்தி கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

    காட்டுத்தீயானது காற்றில் கதிர்வீச்சு அளவை மிகச்சிறிய அளவிலேயே அதிகரிக்கும் என்பதை இதற்கு முன்பு ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் நமக்கு உணர்த்தும் என சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.

  • சரண் அடைந்த 800  உக்ரைன் வீரர்கள் - ரஷியா தகவல்
    20 May 2022 9:06 AM IST

    சரண் அடைந்த 800 உக்ரைன் வீரர்கள் - ரஷியா தகவல்

    மரியுபோல் நகரில் உள்ள அஜோவ் உருக்காலையில் உள்ள சுரங்கங்களில் தங்கியிருந்த வீரர்கள் 1,000 பேர் வெளியேற்றப்பட்டனர் என தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 800 பேர் சரண் அடைந்துள்ளதாக ரஷியா கூறுகிறது.

    இதையொட்டி ரஷிய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 771 உக்ரைன் படை வீரர்கள் சரண் அடைந்துள்ளனர். கடந்த 16-ந் தேதியில் இருந்து 1,730 பேர் ஆயுதங்களை கைவிட்டுள்ளனர். சரண் அடைந்துள்ள வீரர்களில் 80 பேர் காயம் அடைந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

  • 20 May 2022 8:55 AM IST

    கிழக்கு உக்ரைனில் 17 ஆயிரம் பேர் வெளியேற்றம்

    கிழக்கு உக்ரைனில் போர் தீவிரமாகிற நிலையில், டான்பாஸ் பிராந்தியத்தில் இருந்து 17 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக ரஷியா கூறி உள்ளது.

    கிழக்கு உக்ரைனில் ரஷிய படையினரின் தாக்குதல் வலுத்து வருகிறது. இந்த நிலையில் அங்கு டான்பாஸ் பிராந்தியத்தின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகியவற்றின் அபாயகரமான பகுதிகளில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் 2,004 பேர் குழந்தைகள் ஆவார்கள்.

    இந்த தகவலை ரஷிய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் மிகைல் மிஜின்ட்சேவ் தெரிவித்துள்ளார்.

  • 20 May 2022 8:53 AM IST

    உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, நாட்டின் கிழக்கு டான்பாஸ் பகுதி ரஷியப் படைகளால் "முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்