இங்கிலாந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்தியருக்கு சிறை
|இங்கிலாந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்தியருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லண்டன்,
இங்கிலாந்து நாட்டின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியை சேர்ந்தவர் முகன் சிங் (வயது 39). இந்திய வம்சாவளியான இவர் கடந்த 2021-ம் ஆண்டு பர்மிங்காமில் இருந்து மேரிலெபோனுக்கு சென்ற ரெயிலில் ஏறி பயணம் செய்தார். அப்போது பர்மிங்காம் மூர் ஸ்ட்ரீட் ரெயில் நிலையத்தில் இருந்து ஏறிய சுமார் 20 வயது இளம்பெண் ஒருவர் அவரது அருகில் அமர்ந்திருந்தார். அப்போது அந்த பெண்ணுக்கு முகன் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இளம்பெண் அளித்த புகாரின்பேரில் முகன் சிங்கை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை அங்குள்ள வார்விக் கிரவுன் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் முகன் சிங் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் அவருக்கு 16 வாரம் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது. மேலும் பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் அடுத்த 7 ஆண்டுகளுக்கு அவரது பெயரையும் சேர்த்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.