< Back
உலக செய்திகள்
புகைப்பிடித்தலுக்கு எதிரான சட்டத்தை நீக்குகிறது நியூசிலாந்து.. கவலை தெரிவிக்கும் வல்லுநர்கள்
உலக செய்திகள்

புகைப்பிடித்தலுக்கு எதிரான சட்டத்தை நீக்குகிறது நியூசிலாந்து.. கவலை தெரிவிக்கும் வல்லுநர்கள்

தினத்தந்தி
|
28 Nov 2023 12:27 PM IST

சிகரெட் மீதான தடையானது சட்டவிரோத விற்பனைக்கான வாய்ப்பை உருவாக்கும் என்று புதிய பிரதமர் லக்சன் கூறியுள்ளார்.

வெலிங்டன்:

நியூசிலாந்தில் கடந்த மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சியை விட, கிறிஸ்டோபர் லக்சன் தலைமையிலான தேசிய கட்சி அதிக இடங்களை பெற்றது. அதன்பின்னர் 2 சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேசிய கட்சி ஆட்சியை கைப்பற்றியது.

கூட்டணி கட்சிகளுடனான கூட்டணி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றது. கூட்டணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கிறிஸ்டோபர் லக்சன் (வயது 53), நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.

பின்னர் பேசிய பிரதமர் லக்சன், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு முதல் முன்னுரிமை கொடுக்க உள்ளதாக கூறினார்.

மேலும், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை, குறிப்பாக சிகரெட்டில் குறைந்த அளவிலான நிகோடின், சில்லறை விற்பனை குறைப்பு மற்றும் இளைஞர்கள் புகைப்பிடிக்க வாழ்நாள் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை ரத்து செய்ய புதிய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த விவகாரம் நாடு முழுவதும் விவாதப்பொருளாகியிருக்கிறது. புகைபிடித்தலுக்கு எதிரான சட்டத்தை நீக்குவது, பொது சுகாதாரத்தை பாதிக்கும் என்று நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக புகைப்பிடித்தல் எதிர்ப்பு அமைப்பான ஹெல்த் கோலிஷன் அடோடேரோவா வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசு கொள்கை முடிவில் இருந்து பின்வாங்குவது நாட்டிற்கே அவமானம். இது பொது சுகாதாரத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். புகையிலை தொழிலுக்கு ஒரு பெரிய வெற்றியாக அமையும். மக்களின் உயிரிழப்புகளால் அந்த தொழிலின் லாபம் அதிகரிக்கும்" என கூறியுள்ளது.

சிகரெட் மீதான தடையானது சட்டவிரோத விற்பனைக்கான வாய்ப்பை உருவாக்கும் என்றும், பெரும்பாலும் வரி விதிக்கப்படாமல் புழக்கத்தில் இருக்கும் என்றும் லக்சன் கூறியிருக்கிறார்.

நியூசிலாந்தில் முந்தைய ஆட்சியின்போது, இளம் தலைமுறை புகைபிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. அதாவது, 2008க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்வதை இந்த சட்டம் தடை செய்கிறது. இந்த நடவடிக்கையை பொது சுகாதார நிபுணர்கள் மற்றும் புகைப்பிடித்தலுக்கு எதிரான அமைப்புகள் பாராட்டின என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்