நியூயார்க்: காந்தி சிலை இரண்டு வாரங்களில் 2-வது முறையாக சேதம்- இந்திய தூதரகம் கண்டனம்
|இரண்டு வாரங்களுக்கு முன்பு இதே காந்தி சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது.
நியூயார்க்,
நியூயார்க்கில் உள்ள ஒரு இந்து கோவிலுக்கு முன்னால் இருந்த மகாத்மா காந்தியின் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 16 ஆம் தேதி அதிகாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் நடந்த குயின்ஸில் உள்ள கோவிலுக்கு அருகே சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் ஆபாச வார்த்தைகளை எழுதி வைத்து சென்றுள்ளனர். இந்த மாதம் மட்டும் அமெரிக்காவில் காந்தி சிலை சேதப்படுத்தப்படுவது இது 2-வது முறையாகும்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆகஸ்ட் 3 அன்று இதே சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அதே சிலை மீது நடந்த 2-வது தாக்குதலில் சிலை முற்றிலும் தகர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, இந்திய தூதரக அதிகாரிகள் கூறுகையில், சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதால் அமெரிக்க அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என தெரிவித்து உள்ளனர்.