27 நாடுகளில் பரவிய புதிய வகை கொரோனா: புதிய அலை உருவாகலாம் என எச்சரிக்கை
|ஜெர்மனியில்தான் இந்த திரிபு முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நியூயார்க்,
சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பிறகு உலக அளவில் கொரோனா வைரஸ் பரவி லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. பின்னர் கொரோனா தடுப்பூசி கண்டறியப்பட்டு, பொதுமக்களுக்கு செலுத்தப்பட்ட பின்னர் படிப்படியாக கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தது. தற்போதும் ஒரு சில நாடுகளில் கொரோனா அதன் கோரமுகத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் அடுத்த அதிர்ச்சியாக எக்ஸ்இசி வேரியண்ட் (XEC variant) என்ற புதிய வகை கொரோனாவின் தொற்று உலக நாடுகளை ஆட்டுவிக்க ஆரம்பித்து உள்ளது. புதிய வகை கொரோனா ஜூன் மாதத்தில் ஜெர்மனியில் முதன்முதலில் கண்டறியப்பட்டது, அதன் பின்னர் இங்கிலாந்து, ஜெர்மனி, டென்மார்க், அமெரிக்கா ,நெதர்லாந்து உள்ளிட்ட 27 நாடுகளில் இந்த கொரோனா பரவி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. போலந்து, நார்வே, சீனா, உக்ரைன், போர்ச்சுகல் ஆகிய நாடுகளிலும் பரவி இருக்கிறது.
அதிக தாக்கம் கொண்ட இந்த புதிய வகை திரிபு குறித்து இங்கிலாந்தில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. தற்போது 3 கண்டங்களில் 27 நாடுகளில் பரவி உள்ளது. உலகின் மற்ற நாடுகளுக்கு மேலும் பரவும் வாய்ப்பு இருப்பதாகவும், புதிய அலை ஒன்றை உருவாக்கலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மனித உடலில் ( xec) கொரோனா திரிபு தாக்கினால் அதன் அறிகுறிகள் எப்படி இருக்கும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். மற்ற வகை கொரோனா பாதிப்பின் போது ஏற்படும் காய்ச்சல், தொண்டை வலி, இடைவிடாத இருமல், வாசனை நுகர்வை இழத்தல், உடல் வலி போன்றவை காணப்படும். புதிய வகை கொரோனா திரிபின் தன்மையை, செயல்பாட்டை தொடர்ந்து கண்காணித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் கூறி இருக்கின்றனர்.
புதிய வகை கொரோனா ஒமிக்கிரான் துணை வகைகளின் கலப்பினமாகும். தீவிரத்தன்மையின் அடிப்படையில் இது மிகவும் ஆபத்தானது அல்ல என்று ஆரம்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன என்று இந்திய நிபுணர்கள் கூறியுள்ளனர்.