< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்

இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு இந்தியாவுடனான நெருங்கிய தொடர்புகள் என்னென்ன..?

தினத்தந்தி
|
24 Oct 2022 3:54 PM GMT

இங்கிலாந்து வரலாற்றில் முதன்முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமர் ஆக போட்டியின்றி தேர்வானார்.

லண்டன்,

இங்கிலாந்து வரலாற்றில் முதன்முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் அந்நாட்டின் பிரதமர் ஆக சற்று முன் போட்டியின்றி தேர்வானார். அவர் விரைவில் இங்கிலாந்தின் மிக உயரிய பதவியில் பொறுப்பேற்கவுள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் இந்தியாவிற்கு வெளியே, அதுவும் இந்தியாவை பல ஆண்டுகள் தங்கள் ஆட்சியின் கீழ் அடிமைப்படுத்தி வைத்திருந்த இங்கிலாந்து அரசாங்கத்தில் பிரதமர் ஆக தேர்வானது குறித்து நமது நாட்டின் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரிஷி சுனக் இங்கிலாந்தின் 57வது பிரதமராக பதவியேற்க உள்ளார். 42 வயது நிரம்பிய ரிஷி சுனக், நாட்டின் இளம் வயது பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இங்கிலாந்தின் பிரதமர் ஆக பொறுப்பேற்கவுள்ள ரிஷி சுனக்கிற்கும் இந்தியாவிற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு குறித்து காணலாம்.

ரிஷி சுனக் யார்க்ஷயர் தொகுதியின் எம்.பி.யாக பதவியேற்றார். அப்போது அவர் பகவத் கீதையை கொண்டுவந்து பதவியேற்றார் என்பது குறிப்பிட்டத்தக்கது. அவ்வாறு செய்த முதல் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் இவர்தான்.

இவரது பெற்றோர் இருவரும் இந்திய வம்சாவளியினர். இவரது பெற்றோர் வழி தாத்தாக்கள் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தவர்கள்.இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அவரது பெற்றோர் இருவரும் 1960களில் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தனர்.

அவரது தந்தை யாஷ்வீர் சுனக் இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் பொது மருத்துவராக இருந்தார். தாய் உஷா சுனக் மருந்து கடை நடத்தி வந்தார். ரிஷி சுனக் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த பட்டதாரி ஆவார்.

ரிஷி சுனக்கிற்கும் இந்தியாவை சேர்ந்த பிரபல ஐ.டி நிறுவனமான இன்போசிஸ் தலைவர் நாராயண மூர்த்தியின் மகள் அக்சதா மூர்த்திக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கிருஷ்ணா மற்றும் அனுஷ்கா என்ற இரு மகள்கள் உள்ளனர். ரிஷி சுனக் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பெங்களூருக்கு அடிக்கடி வருவார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

ரிஷி சுனக் பாரம்பரியத்தைப் பற்றி அடிக்கடி பேசுபவர். தனது இல்லத்தில் தீபாவளி தினத்தில் தீபத்தை ஏற்றி கொண்டாடினார். மேலும், உடல்தகுதியுடன் இருக்க, ரிஷி சுனக் அடிக்கடி கிரிக்கெட் விளையாட விரும்புபவர்.பெரும் பணக்காரராக அறியப்படும் ரிஷி சுனக்கின் சொத்து நிகர மதிப்பு 700 மில்லியன் பவுண்டுகளுக்கும் மேல் உள்ளது.

பிரதமர் பதவிக்கான பிரச்சாரத்தின் போது ரிஷி சுனக் அதிகமான விமர்சனங்களை எதிர்கொண்டார். மன அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளில் பகவத் கீதை தன்னை அடிக்கடி காப்பாற்றுகிறது என்றும் பகவத் கீதை தன் கடமையாக செய்ய அதில் தவறாமல் இருக்க நினைவூட்டுகிறது என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்