< Back
உலக செய்திகள்
காசா போருக்கு இடையே முதல்முறையாக புதிய பள்ளி திறப்பு
உலக செய்திகள்

காசா போருக்கு இடையே முதல்முறையாக புதிய பள்ளி திறப்பு

தினத்தந்தி
|
9 Nov 2023 9:59 AM IST

புதிய பள்ளிக்கூடம் திறப்பு நிகழ்ச்சியில், இஸ்ரேலின் கல்வி மந்திரி யோவா கிஷ் கலந்து கொண்டார்.

டெல் அவிவ்,

இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 3 ஆயிரம் பயங்கரவாதிகள், கடந்த அக்டோபர் 7-ந்தேதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து, இசை திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் உள்பட எல்லை பகுதியில் தங்கியிருந்தவர்களை கடுமையாக தாக்கி வன்முறையில் ஈடுபட்டனர்.

ஹமாஸ் அமைப்பின் அதிரடி தாக்குதலில், 1400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். அந்த அமைப்பு 241 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றுள்ளது என இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தியது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறும்போது, எங்களுடைய பணய கைதிகளை விடுவிக்காமல் போர்நிறுத்தம் என்பது கிடையாது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரை நாங்கள் வெற்றி பெற விடமாட்டோம் என கூறினார்.

போர் நடந்து வரும் சூழலில், காசா அருகே தமர் மண்டல கவுன்சில் பகுதியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான முதல் பள்ளிக்கூடம் ஒன்று திறக்கப்பட்டு உள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சியில், இஸ்ரேலின் கல்வி மந்திரி யோவா கிஷ் கலந்து கொண்டார்.

ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதல் தொடர்ச்சியாக, இஷ்கொல் மண்டல கவுன்சில் பகுதியில் வசித்து வந்தவர்கள் பாதுகாப்புக்காக வீடுகளை விட்டு வெளியேறினர். அவர்களின் குழந்தைகள் இந்த பள்ளியில், படிக்க இருக்கின்றனர். இவர்களில் படுகொலை செய்யப்பட்ட கிப்புட்ஜ் பெயெரி பகுதியை சேர்ந்த மக்களின் குழந்தைகளும் அடங்குவர்.

இந்த புதிய பள்ளியில் 15 புதிய வகுப்பறைகள் உள்ளன. 400 மாணவர்கள் படிக்கும் வகையில் கட்டப்பட்டு உள்ளது. பள்ளியில், 6 வகுப்பறைகள் ஆனது, 1 முதல் 6 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காகவும், 9 வகுப்பறைகள் ஆனது, 7 முதல் 12 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த பள்ளியின் அருகே, ஓட்டல்கள் மற்றும் விருந்தினர் விடுதிகளும் உள்ளன.

மேலும் செய்திகள்