< Back
உலக செய்திகள்
மாலத்தீவு அதிபராக முகமது முய்சு பதவி ஏற்றார்: இந்திய படைகளை வெளியேற்றுவதில் உறுதி
உலக செய்திகள்

மாலத்தீவு அதிபராக முகமது முய்சு பதவி ஏற்றார்: இந்திய படைகளை வெளியேற்றுவதில் உறுதி

தினத்தந்தி
|
18 Nov 2023 11:00 AM IST

பதவியேற்பு நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு கலந்துகொண்டார்.

மாலே:

மாலத்தீவு அதிபர் தேர்தல், கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது. அதிபராக இருந்த இப்ராகிம் முகமது சோலியும், எதிர்க்கட்சியை சேர்ந்த முகமது முய்சுவும் போட்டியிட்டனர். இதில், முகமது முய்சு வெற்றி பெற்றார்.

இந்நிலையில், புதிய அதிபர் பதவி ஏற்பு நிகழ்ச்சி நேற்று தலைநகர் மாலேவில் நடந்தது. நாட்டின் 8வது அதிபராக முகமது முய்சு பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி முதாசிம் அட்னன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். துணை அதிபராக உசைன் முகமது லத்தீப் பதவி ஏற்றுக்கொண்டார்.

பதவியேற்பு நிகழ்ச்சியில், முன்னாள் அதிபர் இப்ராகிம் முகமது சோலி பங்கேற்றார். இந்தியா சார்பில் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு கலந்துகொண்டார். தெற்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள், தூதரக அதிகாரிகள், முன்னாள் அதிபர்கள் ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்நிலையில் மாலத்தீவுகளில் வெளிநாட்டு ராணுவம் இல்லை என்பதை உறுதி செய்வோம் என புதிய அதிபர் முகமது முய்சு கூறியுள்ளார்.

"சுதந்திரம் மற்றும் இறையாண்மையின் கூறுகள் தெளிவாக வரையறுக்கப்படும். வெளிநாடுகளுடன் நட்புறவை பேணுவேன். நெருங்கிய நாடுகள் மற்றும் தொலைதூர நாடுகளுடன் எந்த பகைமையும் இருக்காது. இந்த வரம்புகளை கொண்டு வரும் மாலத்தீவின் உரிமை மதிக்கப்பட வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.

மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்களை வெளியேற்றுவது மற்றும் வர்த்தகத்தை சமநிலைப்படுத்துவது என்ற வாக்குறுதியை வழங்கி முகமது முய்சு பிரசாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்