கட்டுமான பணியின்போதே மூழ்கிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்
|அணுசக்தியில் இயங்கும் சீன நீர்மூழ்கி கப்பல், கட்டுமானத்தின் போதே தண்ணீரில் மூழ்கியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்,
பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தென் சீனக்கடல் பகுதி முழுமைக்கும் சீனா உரிமை கொண்டாடுகிறது. அதேசமயம் பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான் உள்ளிட்ட பல நாடுகளும் அதற்கு உரிமை கோருகின்றன. இதனால் அந்த நாடுகளுக்கும், சீனாவுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இதனை எதிர்கொள்ள சீனா தனது கடற்படையை வலுப்படுத்தி வருகிறது. அதன்படி சீனாவிடம் தோராயமாக 370 க்கும் மேற்பட்ட கடற்படை கப்பல்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
அதன் ஒருபகுதியாக அணுசக்தியால் இயங்கும் நவீன நீர்மூழ்கிக்கப்பலை சீனா உருவாக்கி வந்தது. யாங்சே ஆற்றின் ஷுவாங்லியு கப்பல் கட்டும் தளத்தில் நிறுத்தப்பட்டு இருந்த கப்பல் கட்டுமான பணியின்போதே நீரில் மூழ்கியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் செயற்கைக்கோள் படங்களும் அதனை உறுதிப்படுத்துகின்றன.
இதையடுத்து குறிப்பிட்ட தகவல் குறித்து எந்தவொரு தகவலும் தங்களிடம் இல்லை என்று வாஷிங்டனில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் நீர்மூழ்கி கப்பல் நீரில் மூழ்குவதற்கான காரணம் மற்றும் அப்போது அதில் அணு எரிபொருள் இருந்ததாக என்பது குறித்தும் தங்களுக்கு தெளிவாக தெரியாது என்று சீன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.